- அனுமன்
- ஸ்ரீ
- ரங்கநாத சுவாமி
- திருவள்ளிகேனி பார்த்தசாரதி
- சென்னை
- வைகுண்ட ஏகாதசி
- ஸ்ரீரங்கம்
- Tiruvallikeni
பூலோக வைகுண்டமான ஸ்ரீ ரங்கம் ரங்கநாதஸ்வாமி க்ஷேத்திரத்திற்கு அடுத்தபடியாக, சென்னையில் இருக்கக்கூடிய திருவல்லிக்கேணி பார்த்தசாரதி க்ஷேத்திரமும் சிறப்புமிக்கது. ஸ்ரீ ரங்கத்தில் எப்படி வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெறுகிறதோ, அதே போல், திருவல்லிக்கேணியிலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். இப்படி, ஸ்ரீ ரங்கத்துக்கும் – திருவல்லிக்கேணிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. சென்ற இதழில், “வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்கள்’’ என்னும் புதிய பகுதி ஆரம்பிக்கப்பட்டது. இதில், மத்வ மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்களை காணவிருக்கின்றோம். முதலில், மகான் வியாசராஜரை பற்றி சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுள் இருக்கும் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனை காணவிருக்கிறோம்.
நான்கு மாடவீதியின் நடுவே பார்த்தசாரதி பெருமாள் கோயில் காணப்படுகிறது. நான்கு மாடவீதிகளிலும் எண்ணற்ற பல விசிஷ்டாத்வைதம் மற்றும் துவைத மடங்கள் இருக்கின்றன. நாம், பார்த்தசாரதி கோயிலுக்கு செல்லும் போது, சாதாரண நாட்கள்தான். ஆகையால் கூட்டம் அவ்வளவாக இல்லை. “இங்கு, வியாசராஜ தீர்த்தர் ஸ்தாபித்த அனுமன் சந்நதி எங்கே உள்ளது?’’ என்று கோயில் பட்டரிடத்தில் விசாரித்தோம்.அவர்கூறியபடி, பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் துவஜஸ்தம்பம் என்று சொல்லக் கூடிய கொடிமரத்தின் அருகிலேயே, வியாசராஜ தீர்த்தர் ஸ்தாபித்த அனுமனை காணமுடிந்தது.
இடம் கொடுத்த நரசிம்மர்
கோயில் வளாகத்தில் உள்ள, மிக பெரிய தூணில் “ஆஞ்சநேயஸ்வாமி’’ காணப்படுகிறார். துளசி மாலைகளும், சாமந்திப்பூக்களும், பல வண்ணங்களாலான கதம்பபூக்கள் என அனுமனின் மீது சாற்றப்பட்டிருந்தது.
அதே போல், ஆஞ்சநேயரின் கழுத்து முதல் பாதம் வரை வெண்ணெய் ததும்ப ததும்ப சாற்றப்பட்டிருந்தது. நேரமாகமாக, சாற்றப்பட்டிருந்த வெண்ணெய்யானது வெயிலில் உருகி வழிந்தோடியது. இவைகளை கண்டதும், எப்படி வெயிலின் தாக்கத்தினால் வெண்ணெய் உருகுகின்றதோ.. அதே போல், நம் மனதில் இருக்கக்கூடிய அனைத்துவிதமான மனக் கவலைகளும், வெண்ணெய் போல் உருகிச் சென்று புத்துணர்ச்சி பெற வேண்டும் என வேண்டினோம். ஒரு மனிதனின் மனமானது புத்துணர்ச்சியோடு காணப்படும் போது, நோய் ஆனது நம்மைவிட்டு விலகிச் செல்லும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் வருவதற்கு முன்பே முதல் முதலில் கோயில் கொண்டவர், “ஸ்ரீ யோக நரசிம்மர் சுவாமி’’ (தற்போது இவரின் கோயில், பார்த்தசாரதியின் கோயில் பின்புறம் உள்ளது). நரசிம்மஸ்வாமிதான், பார்த்தசாரதிக்கு இடம் கொடுத்ததாக ஒரு புராதண குறிப்பு சொல்கிறது. கிட்டத்தட்ட உண்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
பிருந்தாரண்ய க்ஷேத்திரம்
காரணம், ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமிக்கு தனி கொடிமரமும், ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமிக்கு தனி கொடிமரமும் காணப்படுகிறது. அதே போல், தனித் தனியே நுழைவாயில் இருக்கிறது. இன்றும்கூட, நரசிம்மருக்கும் – பார்த்தசாரதிக்கும் தனித் தனியே உற்சவங்களும், விழாக்களும் நடைபெறுகின்றன. ஆகையால், முன்பு சொன்னது போல, நரசிம்ம சுவாமி, பார்த்தசாரதிக்குதன் அருகிலேயே, தான் கோயில் கொண்டிருக்கும் இடத்துலேயே இடம் கொடுத்திருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.முன்னொரு காலத்தில், பார்த்தசாரதி கோயில் இருக்குமிடம், “பிருந்தாரண்ய க்ஷேத்திரம்’’ என்று பெயர். அதாவது, பார்த்தசாரதி கோயில் கட்டப்பட்ட இடம் முழுவதும் துளசி வனம் (துளசி செடிகள்) இருந்ததாக, பார்த்தசாரதி கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. (இந்த கல்வெட்டு இன்றும் அனுமனின் சந்நதிக்கு அருகிலேயே இருக்கிறது) இவைகளுக்கும், பார்த்தசாரதி கோயில் உள்ளே மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனுக்கும் தொடர்புகள் இருக்கின்றன. ஆம்! மூலவரான பார்த்தசாரதி பெருமாள், வருவதற்கு முன்பே அனுமன் வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது.
முதலில் பிரதிஷ்டையானவர் அனுமன்
பார்த்தசாரதியை பிரதிஷ்டை செய்வதற்காக கோயில் எழுப்ப முயற்சிகள் நடைபெற்ற காலம். அப்போது பல தடைகள் வந்துள்ளதாம். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், அதற்கு தீர்வு காண தனது தவவலிமையால் ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக் காட்டி, அதனை பள்ளமாக தோண்டும்படி உத்தரவிட்டார். அதன்படி, மிக பெரிய பள்ளம் ஒன்று தோண்டப்பட்டது. அப்போது, அழகிய அனுமன் சிலை ஒன்று கிடைத்ததாகவும், அதனையே வியாசராஜர் ஒரு தூணின் பிரதிஷ்டானம் செய்து, அந்த தூணையே கோயிலை தாங்கி நிற்கும்படி செய்தார். அதன் பின்னர், பார்த்தசாரதி கோயிலை கட்ட எந்தவித தடைகளும் வரவில்லையாம். பின்னர் காலப் போக்கில், பிரதிஷ்டானம் செய்த அனுமனுக்கு நேர் எதிரில் ஸ்ரீ ராமபிரானையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இந்த அனுமனை பிரதிஷ்டை செய்த வியாசராஜ தீர்த்தர், மத்வ மகான் என்பதினால், இன்றும்கூட ஒரு மத்வ ஆச்சார்தான் பூஜைகளை மேற்கொள்கிறார். அதுமட்டுமா! பார்த்தசாரதி பெருமாளின் உற்சவத்தின் போது, வெள்ளித்தடி (தண்டம்) ஏந்துவதும் ஒரு மத்வ நபர்தான்.
பார்த்தசாரதியை பூஜை செய்த வியாசராஜர்
பார்த்தசாரதி கோயிலை நல்லபடியாக விக்னங்களை விளங்கியதால், வியாசராஜருக்கு சுமார் 12 ஆண்டுக் காலம் பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.தெற்கே பார்த்தவாறு அனுமன் இருப்பதால், நினைத்த காரியங்களை மனதில் வேண்டிக் கொண்டு, இந்த அனுமனை வழிபட்டால், மிக விரைவாகவே அந்த காரியங்களை நடத்திக் கொடுக்கிறார், என்று இங்கு 28 ஆண்டிற்கும் மேலாக பூஜை செய்யும் ராமச்சந்திரன், உறுதியோடு தெரிவித்தார். மூலம், ஆயில்யம் கொண்ட நட்சத்திரக்காரர்கள் சிலருக்கு திருமணத்தடை ஏற்படுகிறது. அவர்கள் தொடர்ந்து மூன்று சனிக் கிழமைகளில் அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வந்தால், திருமணத்தடை விலகி, திருமணம் நிச்சயமாகும் என்றார். (அனுமனை புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படாததால் கோயிலை மட்டும் வைத்திருக்கிேறாம்) ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை செய்த அனுமன் என்பதற்கு, தலையின் மீது வாலும், அதில் மணியும் கட்டியிருக்கும், இங்கும் அப்படி காணப்படுகிறது.
ரா.ரெங்கராஜன்
The post கோயிலை தாங்கி நிற்கும் தூணில் அனுமன் appeared first on Dinakaran.
