×

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு; குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதை எதிர்த்து ஞானசேகரன் மனு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த மனு குறித்து 4 வாரங்களில் காவல்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசேகரனின் தாய் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், எனது மகன் ஞானசேகரனை கடந்த டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொடர்பான வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு ஜனவரி 5ம் தேதி ஞானசேகரன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

எனது மகன் மீதான பாலியல் வழக்கு 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ள நேரத்தில் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக கடந்த 2019ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பழைய வழக்குகளை காரணம் காட்டி காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க கூடிய எந்த விதிமுறைகளையும் மாநகர காவல் துறையினரால் முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, சட்ட விரோத காவலில் அடைக்கப்பட்டுள்ள எனது மகனை விடுவிப்பதுடன் எனது மகன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து நான்கு வாரங்களில் காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு; குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதை எதிர்த்து ஞானசேகரன் மனு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Gnanasekaran ,Chennai ,Madras High Court ,Court ,Dinakaran ,
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...