- அமைச்சர் செந்தில் பாலாஜி
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- அமைச்சர்
- செந்தில் பாலாஜி
- அஇஅதிமுக
- ஜெயலலிதா
- நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. ஜெயலலிதா தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் 2011 முதல் 2015ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, இளநிலை பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் நடத்துனர்கள் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு நியமனம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மேல்விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்றமும் முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க சென்னை எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், போக்குவரத்துறையில் ஒவ்வொரு பதவிக்கும் பணம் பெற்றது தொடர்பாக தனித்தனியாக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை காவல்துறையினர் தாக்கல் செய்த நிலையில் அவற்றை தனி வழக்காக தான் விசாரித்து இருக்க வேண்டுமே தவிர ஒன்றாக இணைத்து இருக்கக் கூடாது. இந்த வழக்கை ஒன்றாக இணைத்ததால் விசாரணைக்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதால் வழக்கை இணைத்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், .கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து மனுவுக்கு மார்ச் 13ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
The post அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒன்றாக இணைத்த உத்தரவுக்கு தடை கோரி மனு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

