மகான்களே வாழ்வின் கலங்கரை விளக்கம்
“பதத்தே உருகி நின்பாதத்திலே மனம்பற்றி, உன்றன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய்;
இனி யான்ஒருவர்
மதத்தே மதிமயங்கேன்; அவர்போன
வழியும்செல்லேன்!
முதல்தேவர்மூவரும்யாவரும்போற்றும்
முகிழ்நகையே!’’
– தொன்னூற்றி இரண்டாவது அந்தாதி
“ஆதியாக”
குழந்தைகள் சில நேரம் தவறுகளையும், வெறுப்பு தோன்றும் படியான செயல்களையும் மிகுதியாகச் செய்தாலும் தாயையும், தந்தையையும், குருவையும் ஒத்து தாய் அன்பினாலும் தந்தையின் அரவணைப்
பினாலும் குரு அறிவினாலும் அக்குழந்தைகளுக்கு தன்னையும் குழந்தையின் பண்பையும் உலகியலின் இயல்பையும் அறிவித்து. தீயவைகளிலிருந்து காத்து நன்மைகளைப் புகட்டி கருணை செய்வது போல நம்மைக் காப்பவள் உமையம்மை என்று பாடலின் வழி அறிவிக்கிறார் பட்டர். அதை அறிவோம். இனி பாடலுக்குள் நுழைவோம்.
“அந்தாதி பொருட்சொல்
வரிசை”
* பதத்தே உருகி
* நின் பாதத்திலே மனம் பற்றி
* உன்றன் இதத்தே ஒழுக
* அடிமை கொண்டாய்
* இனி யான் ஒருவர் மதத்தே மதிமயங்கேன்
* அவர் போன வழியும் செல்லேன்
* முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும்
முகிழ்நகையே
இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கத்தை இனி காண்போம்.“பதத்தே உருகி’’இப்பதமானது, ஒரு உபாசனைக் கலைச்சொல். இறைவியை பூசனை செய்யும் போது ஏற்பட வேண்டிய உள்ள உணர்வைப் பற்றி ஐந்து வகையாக பேசுகிறது. இறைவியை வணங்குவோருக்கு இருக்கவேண்டிய மனப்பாங்கு விரும்பித்தொழுதல், ஆனந்தமாய் இருத்தல் என்பதையே பட்டர் `விரும்பித் தொழும் அடியார்’ (94) `ஆனந்தமாய் என் அறிவாய்’ (11) என்பதனால் அறியலாம்.
கொண்ட கொள்கையில் நம்பிக்கை உடையவராய் இருத்தல் என்பதையே `கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது’ (23) என்கிறார். மேலும், சமய நூல்களின் படி குரு உபதேசத்தின் படி சமயக் கொள்கைகளை மிகத் துல்லியமாக அறிந்து உணர்ந்து பின்பற்றுவது இதை `குறித்தேன் மனத்தினில் நின்கோலம் எல்லாம் நின் குறிப்பறிந்து’ (76) என்பதனால் அறியலாம். இவையாவும் உபாசகனுக்கு இருக்க வேண்டிய பண்புகள்.
இருக்கக் கூடாத பண்புகள், அடியவர்களுக்கு தொண்டு செய்வதை அலச்சியமாக கருதுவது `தொண்டு செய்யாது’ (45) என்ற பட்டரின் வாக்கால் அறியலாம். மேலும், இறைவியே அருளிய போதும் தனது இச்சையினால் தாழ்வான வரங்களைக் கேட்டுப் பெற்று பின்பு துன்புறுவது. இதை `இச்சையே பண்டு செய்தார்’ (45) என்பதனால் அறியலாம். அன்றாடம் உலகியல் சார்ந்து செய்ய வேண்டிய கடமைகள் உரிமைகள் பொறுப்புகள் இவற்றைச் செய்தலில் மிகுந்த நாட்டம் கொண்டு, அதாவது திருமணம் செய்து கொள்ளுதல், குடும்பப் பாதுகாப்பை கவனித்தல், அதற்காக சம்பாதிக்க முயற்சி செய்வதால் பூசனை, ஜபம், தியானம் முதலியவற்றை தள்ளிப்போடுதல், காலத்தில் செய்ய முடியாது போதல், நாளை செய்யலாம் என விட்டுவிடுதல், உலகியல் செயல்களில் ஈடுபடுதலினால் இறை நினைவு அற்றுப்போதல் இவை உபாசகனுக்கு ஆகாது. `கருமநெஞ்சால்’ (3) ‘பாழ்நரகக் குழிக்கே அழுந்தும்’ (79) என்பதனால் அறியலாம். இதையே உபாசனையில் இருக்க கூடாத பண்புகள் என்கிறார்.
உபாசனையில் தவறு செய்வதனால் தோன்றும் மனக்கலக்கம், பூசனை விக்ரகம் சிதைந்தாலோ, மந்திர எழுத்துக்களை தவறாக உச்சரித்தாலோ, எதிர்கால துன்பத்தை தேவதை முன்னரே அறிவிக்கும் போதும் மனத்தளர்வு ஏற்படும் என்பதையே பட்டர் `நன்றே வருகினும் தீதே விளைகினும்’ (95) என்பதனால் அறியலாம்.
இறைவியின் அருளைப் பெற்றதனால் ஏற்படும் மனத் தெளிவு, பூசனை செய்யும் போது வரும் நல்லவைகளை அறிவிக்க மனம் காரணம் ஏதும் இன்றி மகிழ்ச்சியாய் இருக்கும். மேலும், துன்பம் தாக்கும் சூழலில் பூசனை செய்தாலும் அத்துன்பத்தினால் வரும் விளைவு இறைவியினால் போக்கப் படுமாயின் பூசனை செய்யும் போது நமக்கு மகிழ்ச்சியே ஏற்படும். இதையே `ஆனந்தமாய் என் அறிவாய்’ (11) என்பதிலிருந்து அறியலாம்.
மனதின் பொய்யான நினைவு மனம் சில நேரங்களில் கடவுள் நம் கண்முன் தோன்றி அருள்பாலித்தது போலும், அதனால் தனக்கு பெரு மகிழ்ச்சி ஏற்பட்டதாக தானே கருதிக்கொள்ளும். இது இறைவியின் அருள் அல்ல. மனதின் அறியாமையே `அறிவிழந்து’ (94) என்று பட்டர் கூறுவதிலிருந்து அறியலாம். உபாசனையில் மூன்று நிலையில் அறிவிழந்து போகும் முதல் நிலையில் இறைவியைப் பற்றிய அறியாமை இரண்டாம் நிலையில் அறைகுறையாய் அறிந்த அறிவு மூன்றாம் நிலையில் இறைவியோடு முழுவதும் கலப்பதனால் அறிவிழந்து என்று குறிப்பிடுகிறார். இத்தனைக் கருத்துக்களையும், மனதில் கொண்டே “பதத்தே உருகி’’ என்கிறார்.
“நின் பாதத்திலே மனம் பற்றி’’ “நின்’’ என்பதனால் அபிராமியை நோக்கி உபாசகனுடைய மனமானது எப்பொழுதும் நல்ல விளைவு வந்த போதும், தீய விளைவுகளை எதிர் நோக்கும் போதும் தேவதையிடத்து வேண்டிய பலன் கிடைக்காத போதும் மாறுபடாமல் இறைவியின் திருவடியில் மனம் ஒன்றி இருப்பதையே “பாதத்திலே மனம் பற்றி” என்கிறார். இத்தகைய பற்றுதலானது உமையம்மையின் அருளால் அன்றி உபாசகனுக்கு தன் இயல்பால் ஏற்படுமாயின் அது மாறுபாடுகளை அடைவதை நன்கு உணரலாம்.
உமையம்மையின் அருளால் ஏற்பட்டால் அபிராமி பட்டரைப் போல் கீழே நெருப்பு இருந்தாலும், 77வது பாடல் வரை நிலவு வரவில்லை என்றாலும் முதல் நிலையிலேயே, தான் செய்த தவறு உணர்ந்து அரசனிடத்து அமாவாசைதான் பௌர்ணமி இல்லை என்பதைகூறி தெளிவுபட விளக்கி இருக்க வாய்ப்பு இருந்த போதிலும், கொண்ட கொள்கை மாறாது இருக்கும் சூழ்நிலையை சிந்திக்காது பட்டரின் மனநிலையானது உமையம்மையின் திருவடியைப் பற்றியே இருந்தது. அதற்கு காரணம் உமையம்மையின் அருளினால் வந்ததே ஆகும். அந்த உறுதியான மன நிலையையே அவர் பயிற்சியினால் பெற்றதாக, இச்சையினால் பெற்றதாக, முயற்சியினால் பெற்றதாகதான் கூறவில்லை. இதையே `வரல்வேண்டும் வருந்தியுமே’ (89) என்பதையே
“நின் பாதத்திலே மனம் பற்றி” என்கிறார்.
“உன்றன் இதத்தே ஒழுக’’ ‘`உன்றன்’’ என்ற வார்த்தையால் முன்நின்ற அபிராமி, குரு இருவரையும் குறிப்பிடுகிறார். உபாசனையினாலும் யோகம் போன்ற பயிற்சியினாலும் ஜபத்தின் ஆவர்த்தியினாலும், இடைவிடாத பண்பினாலும் உள்ளத்தில் தோன்றும் மாற்றத்தை தானே காண்கிறார். தன் இயல்பு இது அன்று என்று தானே உணர்கிறார். இதையே `அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே’ (31) என்பதினால் நமக்கு உணர்த்துகிறார்.
ஜபத்தினால் பாவம் நீங்க வேண்டும். தியானத்தினால் ஞானம் ஓங்க வேண்டும். பூசையினால் அன்பு மிக வேண்டும். ஹோமத்தினால் தேவதையின் காட்சி கண் முன் தோன்ற வேண்டும் [ப்ரத்யஷ்சம்] வேதாத்யான பயிற்சியினால் குழப்பமின்றி தெளிவு பெற வேண்டும். இத்தகைய பண்புகள் யாவும் தோன்றுவதையே “இதத்தே ஒழுக” என்று குறிப்பிடுகிறார். ஜபம் செய்து தொந்தரவுகள் வந்தாலோ, தியானம் செய்து குழப்பம் வந்தாலோ, பூஜை செய்து கோபம் வந்தாலோ, ஹோமத்தினால் பொருள் நஷ்டம் ஏற்பட்டாலோ, சாத்திரத்தில் குழப்பம் வந்தாலோ செய்யும் பயிற்சியில் தவறு என்று உணர வேண்டும். பயிற்சி குற்றமாகாது. இவை பயிற்சி செய்பவரின் குற்றமே ஆகும்.
அதனால்தான் குருவை, தேவதையின் அருளைப் பெறும் வரையும் பெற்ற பின்பு எப்போதும் நாடி இருக்க வேண்டும் என்கிறது சாத்திரம். குருவானவர் உபாசகன் செய்யும் தவறை சரி செய்வார். ஆனால், பயிற்சி என்பது உபாசகனின் முயற்சி, ஊக்கம், இடைவிடாத பண்பு, சோர்வில்லாமை, உழைப்பதற்கு முன்னரே பயனை எதிர்பாராமை, குருவிடம் பணிவுடமையினால் எதையும் சாதிக்கலாம். இதையே “உன்றன் இதத்தே ஒழுக” என்கிறார்.
“இதத்தே ஒழுக” என்பது குருவை பணிவது, அவரை நம்புவது, அவர் சொன்ன வழி நடப்பது, அவரிடத்து பொய்யின்றி இருப்பது. இத்தகைய பண்புகளால் சாத்திரத்தை குருவிடம் பெறுவது சுலபம். இதையே `பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி’ (25) என்கிறார். `அறிந்தேன் எவரும் அறியா மறையை’ (3) `வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு’ (79) `பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே’ (6) `ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்’ (11) ‘அறிந்தேன்’ என்பதனால் மந்திரத்தை கற்றதையும் ‘பேணி’ என்பதனால் ஆசாரத்தைக் கடைபிடித்ததையும் ‘வழிபட நெஞ்சுண்டு’ என்பதனால் குரு சொன்னவற்றை சிந்தித்ததையும் ‘பன்னியது’ (6) என்பதனால் கற்று, அறிந்து, சிந்தித்தவற்றை செயல்படுத்தியதையும் ‘ஆனந்தமாய்’ (11) என்பதனால் முன் சொன்னவற்றை செய்வதனால் உபாசனையின் வழித்தோன்றிய மெய் [உண்மை] அனுபவத்தையும் குறிப்பிடுகிறார்.
இந்த வரிசையில் இந்தப் பண்புகள் மாறுபடாதிருக்க வேண்டும் மாறுபடின் இடர்பட நேரிடும் என்று எச்சரிக்கிறார், அல்லது பயன் இன்றி போய்விடும் என்று அறிவுறுத்துகிறார். உபாசகன், தான் விரும்பிய பலனை, விரும்ப வேண்டியதை மிகச்சரியாக துல்லியமாக அறிதல் வேண்டும். இது குருவருளாலும், முயற்சியினாலும், சரிவர செய்வதாலும் தேவதையின் அருள் இன்றி பலன் கிடைக்காது. கர்ம பலனை உமையம்மையே அளிக்கிறார் என்பதை `கர்மபலே சுஜுஸ்டாம்’ என்கிறது வேதம் இத்தனையும் மனதில் கொண்டே “உன்றன் இதத்தே ஒழுக” என்கிறார்.
“அடிமை கொண்டாய்’’ தன் முயற்சியாலும் தன் நம்பிக்கையாலும், குருவருளாலும் செய்த யாவுமே உமையம்மையின் கருணை என்பதை அருள் அடைந்த பின்பே உணர்கிறார்.
அதையே `நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்’ (61) என்பதனால் தகுதிகள் ஏதும் இல்லாமலேயே என்னை ஆண்டு கொண்டாய் உமையம்மையின் அருள் அபிராமி பட்டரை ஆட்கொள்ளாவிட்டால், தான் என்னவாயிருப்பேன் என்பதை அவரே குறிப்பிடுகிறார். `ஆசைக்கடலில் அகப்பட்டு அருள் அற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை’ (32) என்பதனால் அந்தகன் கை பாசத்தில் அகப்பட்டிருப்பேன் என்கிறார்.
மேலும், `நின் அன்பர் (குருவை) பெருமை எண்ணாத கருமநெஞ்சால் மறிந்தே விழுநரகுக்கு உறவாய மனிதரையே’ (3) என்பதனால் செய்ய வேண்டிய கருமங்களையே அதிகமாக நினைத்து இறைவியாகிய உன்னை நினைக்காமல் மறந்து இறைவியின் அருளை அறிவித்த குருவையும் மறந்து மீண்டும் மீண்டும் நரகக் குழியிலே விழுந்து துன்புற்றிருப்பேன். என் மனம் என் வசப்பட்டிருக்காது. மனத்தின் வசம் நான் அடிமைப்பட்டு `துணிந்திச்சையே பண்டு செய்து’ (45) துன்புற்று உடலையே அதிகமாக நினைத்து உன்னை நினைக்காமல் துன்புற்றிருப்பேன். இதை `இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கென் குறையே’ (71) என்கிறார்.
“அடிமை கொண்டாய்” என்பதனால் உமையம்மையை மிண்டு செய்யும் வெறுக்கும், மறுக்கும் பண்புடைய என்னை நீயே உன் அன்பினால் உன் கருணையினால் தேவர் முதலானோர் எனக்கு முன்னே உன் அருளுக்கு காத்திருக்க நாயேனாகிய என்னை நயந்து வந்து என் மீது மிக்க நேசம் கொண்டு நான் என் தலையை விலக்கிக் கொள்ளும் போதும் நீயே உன் திருவடியை என் தலைமீது வலியவைத்தாய், அதன் அருளால் முன்னில் என் இயல்புகளை என் விதியை என் பாவத்தை அழித்து மாற்றி முரண்பாடு உடைய என்னை உன்தன் இதத்தே நீ விரும்பும் வண்ணம் உனக்கு பணி செய்ய எனக்கு அருள் செய்தாய் `பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை’ (27) என்பதனாலும் அறியலாம்.
மேலும், யாருக்கும் தெரியாமல் இருந்த என்னை `நின் அடியாருடன் கூடி’ (6) நடு இருக்கப் பண்ணி’ (41) அருள் செய்தாய் என்பதனால் எத்தகைய புண்ணியத்தை செய்து விட்டாய், என்று நான் என்ன செய்தேன் இறைவிக்கு அவள் எனக்கு அருள் புரிய என்பதை `புண்ணியம் செய்தனமே மனமே’ (41) என்று தனக்குள்ளே எண்ணி வியந்து உமையம்மை “அடிமை
கொண்டாய்” என்கிறார்.
(தொடரும்)
முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்
The post அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் appeared first on Dinakaran.
