கோத்தகிரி, பிப்.26: கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுஹட்டி ஊராட்சி மன்ற பகுதியில் நாள்தோறும் வீடுகளில் குப்பைகளை சேகரிக்கும் வாகனம் அவற்றை குப்பை கிடங்கில் கொட்டாமல் சாலையில் நிறுத்தி வைக்கப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுஹட்டி ஊராட்சியில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களில் நாள்தோறும் காலை நேரங்களில் கிராமங்களுக்கு சென்று வீடுகள் மற்றும் கடைகளில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து குப்பைகள் சேகரிப்பு செய்து குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை ஏற்றி வந்த வாகனம் குப்பை கிடங்கில் கொட்டாமல் கோத்தகிரி குன்னூர் நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறாத வகையில் தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களை சாலையில் நிறுத்தி வைப்பதால் துர்நாற்றம் appeared first on Dinakaran.
