- யூனியன் அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமித் ஷா
- கோயம்புத்தூர்
- மத்திய உள்துறை அமைச்சர்
- போபால், மத்திய பிரதேசம்
- பாஜக
- தின மலர்
கோவை: கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் அமித்ஷாவிற்கு வரவேற்பு அளித்தனர்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார். மும்மொழிக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ரூ.2 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு தர மறுத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கோவை காந்திபார்க் ரவுண்டானாவில் நேற்று நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார்.
ஏராளமானோர் பங்கேற்று ‘கோ பேக் அமித்ஷா’ என கோஷம் எழுப்பினர். தொண்டர்கள் கருப்புச்சட்டை அணிந்து, கருப்பு பலூன் பறக்கவிட்டனர். இதேபோல கோவை-அவிநாசி சாலையில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரி அருகே பல்வேறு அமைப்புகள் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திக, இந்திய கம்யூனிஸ்ட், விசிக, ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள், அம்பேத்கர், பெரியாரை இழிவுபடுத்திய அமித்ஷாவே திரும்பி போ, தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவே திரும்பி போ என்று முழக்கமிட்டனர். இதையடுத்து பெண்கள் உட்பட 170 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், மசக்காளிபளையம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப்புலிகள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ரெட் ஸ்டார் ஆகிய அமைப்புகள் சார்பில் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட 84 பேரை போலீசார் கைது செய்தனர்.
The post தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதி தர மறுப்பு கோவை வந்த அமித்ஷாவை கண்டித்து கருப்புக்கொடி: 254 பேர் கைது appeared first on Dinakaran.
