சென்னை: கல்விச் சுற்றுலாவாக மலேசியா சென்றுள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 2022-23ம் ஆண்டு சட்டப் பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான அறிவிப்பில் பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும் தேசிய அல்லது மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி 2022-23ம் கல்வி ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடந்த 4 மன்றப் போட்டிகளில் ஒவ்வொரு மன்றத்துக்கும் 25 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக 2023-24ம் கல்வி ஆண்டுக்கான அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் மன்றச் செயல்பாடுகளில் ேபாட்டி நடத்தப்பட்டு 66 பேர் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் வரையில் கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். தற்போது, 23ம் தேதி முதல் 28ம் தேதி முடிய 52 மாணவ, மாணவியர் மற்றும் 4 ஆசிரியர்கள், அலுவலர்கள் என மொத்தம் 56 பேர் மலேசியாவுக்கு கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர்.
அவர்களுடன் சேர்ந்து கொள்வதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி விமான நிலையம் சென்றார். அங்கு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். அந்த சந்திப்பில் மாணவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவது குறித்தும், தற்போது 8வது முறையாக கல்விச் சுற்றுலா சென்றுள்ள விவரங்களை அமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து, சுற்றுலா சென்றுள்ள மாணவ, மாணவியருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.
The post தமிழக மாணவர்களுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து appeared first on Dinakaran.
