கோவை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.75 கோடி சொத்து குவித்ததாக கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ஜூனன் வீடு மற்றும் நிறுவனங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ஜூனன் (54). இவர், பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 962 ரூபாய் சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் எம்எல்ஏ அம்மன் கே.அர்ஜூனன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி மீது கோவை ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தார்.
இதன் தொடர்ச்சியாக கோவையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர்கள் லதா மற்றும் விஜயலட்சுமி தலைமையில் நேற்று காலை 6 மணி முதல் கோவை சுண்டாக்காமுத்தூர் ரோடு திருநகர் 3வது தெருவில் உள்ள அம்மன் கே.அர்ஜூனன் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த அம்மன் அர்ஜூனன், அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். சொத்து ஆவணங்களை சேகரித்தும், எதன் மூலம் எவ்வளவு வருவாய் வந்தது? எனவும் கேள்வி எழுப்பினர்.
சோதனையையொட்டி வீட்டுக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. ரெய்டு தகவல் அறிந்து அவரது வீட்டு முன்பு ஆதரவாளர்கள், அதிமுக தொண்டர்கள் திரண்டனர். தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்பி வேலுமணி, செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், பிஆர்ஜி அருண்குமார் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது தவிர அம்மன் கே அர்ஜூனன் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் கோபாலகிருஷ்ணன் பெயரில் செயல்பட்டு வரும் கோவை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சூலூர் சுல்தான்பேட்டையில் உள்ள மிஸ் ஜென்யூன் ஷெல் கார்ப் பி.லிட் ஆகிய இரு நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இரு நிறுவனங்களிலும் தலா 5க்கும் மேற்பட்ட போலீசார் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அம்மன் அர்ஜூனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் மறவப்பட்டி. இவருக்கு காயத்திரி என்ற ஒரு மகள் உள்ளார். மகன் கோபாலகிருஷ்ணன் கடந்த 3.9.23ல் இறந்து விட்டார். இவர் அதிமுக மாவட்ட தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளராக இருந்தார். அம்மன் கே.அர்ஜூனன் கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்று கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவானார்.
தற்போது 2வது முறையாக எம்எல்ஏவாக உள்ளார். ஏற்கனவே அதிமுக மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகார், ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக பல மாஜி அமைச்சர்கள் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடந்து உள்ளது. கோவையில் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி வீட்டில் 3க்கும் மேற்பட்ட முறை ரெய்டு நடந்துள்ளது. தற்போது கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ வீட்டில் நடைபெற்று வரும் ‘திடீர்’ ரெய்டு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே கிலியை ஏற்படுத்தி உள்ளது.
* வேலுமணி பினாமி சொத்து நிர்வகிப்பு
அதிமுக எம்எல்ஏ வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர் அம்மன் கே.அர்ஜூனன். இவரது கட்டுப்பாட்டில் கோவை மாவட்ட டாஸ்மாக் பார்கள் உள்ளன. இவர் எஸ்பி வேலுமணியின் பினாமி சொத்துகளை நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 முறை ரெய்டு நடத்தி பல்வேறு ஊழல் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். அதன் அடிப்படையில்தான் அம்மன் அர்ஜூனன் வீட்டில் ரெய்டு நடந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரெய்டில் கைப்பற்ற ஆவணங்களின் அடிப்படையில் அம்மன் கே.அர்ஜூனனிடம் விசாரணை நடந்து வருகிறது.
* சாதாரண குடும்பத்தில் பிறந்து கோடீஸ்வரரானவர்
மதுரை மாவட்டம் மறவப்பட்டி கிராமத்தில் இருந்து அம்மன் கே அர்ஜூனன் சில ஆண்டுகளுக்கு முன்புதான் கோவை வந்தார். அதிமுக கட்சியில் சேர்ந்து பல பொறுப்புகளை வகித்தார். அவர் எம்எல்ஏ ஆன பிறகு வருமானம் சேர்ப்பதில் அசுர வளர்ச்சி கண்டார். இவரது தந்தை கிருஷ்ணசாமி விவசாயம் செய்தவர். பெரிய பின்புலம் இல்லை.
சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் 2016 தேர்தலில் தாக்கல் செய்த சொத்து மதிப்பும் தற்போது அவரது சொத்து மதிப்பும் பல மடங்கு அதாவது 21-5-2016ம் ஆண்டு முதல் 31-3-2022ம் ஆண்டு வரை 71.19 சதவீதம் உயர்ந்துள்ளது. அம்மன் கே.அர்ஜூனன் மகன் கோபாலகிருஷ்ணன் தனியார் நிறுவனம் நடத்தி சொந்த தொழிலை கவனித்து வந்தார்.
இதுதவிர அவருக்கு வேறு வருமானம் இல்லை. ஆனால் அவரது நகை, கையிருப்பு, அசையும் சொத்து, அசையா சொத்து பல மடங்கு உயர்ந்து உள்ளது. மகன் நிறுவனத்தின் வருமானம் மற்றும் எம்எல்ஏ சம்பளம் ஆகியவற்றை கணக்கீடு செய்ததில் அம்மன் கே அர்ஜூனனின் தனது பதவியை தவறாக பயன்படுத்தி பல மடங்கு சொத்து குவித்து கோடீஸ்வரராக உயர்ந்து உள்ளது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
The post வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.75 கோடி சொத்து சேர்த்த வழக்கு அதிமுக எம்எல்ஏவின் வீடு, நிறுவனங்களில் ரெய்டு: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.
