கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஒடிசா வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளம் ஓரத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு வாலிபர் ஒருவர் கஞ்சா சப்ளை செய்வதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபரை போலீசார் கையும் களவுமாக பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிடிபட்ட வாலிபர் ஒடிசாவை சேர்ந்த மன்றிபெஹாரா (25) என்பதும், இவர் ஒடிசாவில் இருந்து ரயிலில் வரும்போது 5 கிலோ முதல் 10 கிலோ வரை கஞ்சா எடுத்து வந்து கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் சப்ளை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த வாலிபரை கைது செய்த போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவு ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post கூடுவாஞ்சேரியில் கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது appeared first on Dinakaran.
