- எங்களுக்கு
- அதிபர் டிரம்ப்
- ஐங்கோணம்
- வாஷிங்டன்
- சார்லஸ் கியூ பிரவுன் ஜூனியர்
- அமெரிக்க இராணுவம்
- டொனால்டு டிரம்ப்
- தின மலர்
வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் கறுப்பின உயர் அதிகாரி சார்லஸ் கியூ பிரவுன் ஜூனியரை அதிபர் டிரம்ப் பதவி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அவரது பல அதிரடி முடிவுகள் சர்சையாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டிரம்ப் நிர்வாகம், ராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் விமானப்படை ஜெனரல் சி.க்யூ.பிரவுன் ஜூனியரை நேற்று முன் பணிநீக்கம் செய்து அறிவித்தது. பிரவுன், பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பாக அதிபருக்கு ஆலோசனை வழங்கும் கூட்டு பணியாளர்கள் குழு (ஜேஎஸ்சி) தலைவராகவும் இருந்தவர்.
அதோடு, அமெரிக்க ராணுவ வரலாற்றிலேயே ஜேஎஸ்சி தலைவராக பதவி வகிக்கும் 2வது கறுப்பின ஜெனரலாகவும் சாதனை படைத்தவர். தனது 16 மாத பதவிக்காலத்தில் பிரவுன் உக்ரைன், மத்திய கிழக்கு போர் விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர். இவரது பணி நீக்கம் பென்டகனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ராணுவத்தில் பன்முகத்தன்மை, சமத்துவத்தை விரும்பும் நபர்கள் குறிவைத்து நீக்கப்படுவதாகவும் தகவல்கள் பரவுகின்றன.
கடந்த 2020ல் அமெரிக்காவின் கறுப்பினத்தவர் ஒருவர் வெள்ளையின காவல் துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அப்போது கறுப்பினத்தவர்களின் இயக்கத்திற்கு பிரவுன் ஜூனியர் ஆதரவு தெரிவித்திருந்தார். இதுபோன்ற நிகழ்வுகளால் அவரை டிரம்ப் ஓரம் கட்டியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘ஜெனரல் சார்லஸ் பிரவுன் நாட்டிற்காக 40 ஆண்டுகள் செய்த சேவைக்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் சிறந்த மனிதர், சிறந்த தலைவர்.
அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்’’ என கூறி உள்ளார். இதுதவிர, கடற்படையில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அட்மிரல் லிசா பிரான்செட்டி, விமானப்படை பணியாளர்களின் துணைத் தலைவர் ஜெனரல் ஜிம் ஸ்லைப் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். டிரம்பால் பதவி நீக்கப்படும் 2வது பெண் உயர் அதிகாரி லிசா என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, டிரம்ப் உத்தரவின் பேரில், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் 5,400 தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை அடுத்த வாரத்தில் தொடங்கும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல அரசு துறைகளில் பணியாளர்கள் எண்ணிக்கையை டிரம்ப், மஸ்க் இருவரும் கணிசமாக குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
* உக்ரைனுடன் ஒப்பந்தம்
உக்ரைனில் பூமிக்கடியில் உள்ள அரிய தாதுக்களை அமெரிக்கா எடுப்பதற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இடம் பெறாததால் ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், உக்ரைன், ரஷ்யாவுக்கான டிரம்பின் சிறப்பு தூதர் கெய்த் கெல்லாக் உக்ரைனில் 3 நாள் பயணம் மேற்கொண்டு நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் இந்த ஒப்பந்தத்திற்கு ஜெலன்ஸ்கி சம்மதித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா, உக்ரைன் உறவு பலப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவரை போரில் உக்ரைனுக்காக பல லட்சம் கோடி பணத்தை அமெரிக்கா செலவு செய்திருப்பதை திருப்ப எடுக்கும் நடவடிக்கையாக அதிபர் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திற்கு அழுத்தம் தந்தது குறிப்பிடத்தக்கது.
The post அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சர்ச்சை கறுப்பின ராணுவ அதிகாரி நீக்கம்: பென்டகனில் 5,400 ஊழியர்கள் வேலை பறிப்பு appeared first on Dinakaran.
