- சிலாவட்டம்
- கட்டவாக்கம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- மதுராந்தகம்
- மதுராந்தகம் ஒன்றியம்
- வால்லாபாத் யூனியன்
- தின மலர்
மதுராந்தகம், பிப்.21: மதுராந்தகம் ஒன்றியம் சிலாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் தலா ₹ 14.42 கோடி மதிப்பில் நவீன நெல் சேமிப்பு கிடங்குகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் ஊராட்சியில், ₹14.42 கோடி மதிப்பில் நவீன நெல் சேமிப்பு கிடங்குகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். மதுராந்தகம் தாலுகாவில் விவசாயத்தை பிரதான தொழிலாக விவசாயிகள் செய்து வருகின்றனர். பருவ மழை காலங்களில், நெல் விவசாயம் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதில், குறிப்பாக மதுராந்தகம் தாலுகாவில் உள்ள அச்சிறுப்பாக்கம், ராமாபுரம், வேடந்தாங்கல், ஒரத்தி, எல்.எண்டத்தூர், மெய்யூர், ஈசூர், பூதூர் உள்ளிட்ட பகுதிகளில், 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், நெல் விவசாயம் செய்கின்றனர்.
இதனால் தஞ்சை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் விவசாயம் செய்வது இரண்டாவது இடமாக திகழ்ந்து வருகிறது. விவசாயிகளிடமிருந்து, தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகின்றது. இவ்வாறு, விவசாயிகளிடமிருந்து, ₹30 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த நெல் மூட்டைகள், சிலாவட்டம் மற்றும் அண்டவாக்கம் பகுதிகளில் உள்ள திறந்த வெளி நெல் சேமிப்புக் கிடங்கில், நெல் மூட்டைகள் வீணாகாதவாறு, தரைப்பகுதியில் கற்கள் மற்றும் சவுக்கு கட்டை கொண்டு அடுக்கப்பட்டு, நெல் மூட்டைகளை பாலீத்தீன் தார்பாய்களால், மூடி பாதுகாத்து, லாரிகள் வாயிலாக, தென் மாவட்டங்களில் உள்ள அரவை மில்களுக்கு, செங்கல்பட்டில் இருந்து ரயில்களில் அனுப்பி வந்தனர்.
தற்காலிகமாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து, பாதுகாப்பதற்கு பதிலாக, நிரந்தரமாக, மேற்கூரை தளம் அமைத்து, நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டுமென, விவசாயிகள், கலெக்டரிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக, மதுராந்தகம் அடுத்த சிலாவட்டத்தில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய, நவீன நெல் சேமிப்பு தளம் அமைக்க, நபார்டு வங்கி நிதி உதவியுடன், ₹14.42 கோடி மதிப்பீட்டில், தலா 15 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, 5 மேற்கூரை அமைப்புடன் கூடிய, நவீன நெல் சேமிப்பு தளம் கட்டுமான பணிகள், கடந்த பிப்,2024ல் தொடங்கி, பணிகள் நடந்து வந்தன.
ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதற்காக சிலாவட்டாத்தில் நடந்த நிகழ்வில், முதுநிலை மண்டல மேலாளர் ரேணுகாம்பாள், உதவி தர ஆய்வாளர் புண்ணியகோட்டி, திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மாவட்ட கவுன்சிலர் ராஜாராம கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் பாலு, கிராம மக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வாலாஜாபாத்: விவசாய மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுரம் மண்டல நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில், விவசாயிகளிடமிருந்து நேரடியாக நூற்றுக்கும் மேற்பட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், நெல் கொள்முதல் செய்யப்படும் அனைத்து நெல் மூட்டைகளும் பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கும் வகையில், வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கம் ஊராட்சியில் 15000 மெட்ரிக் டன் நெல் சேமிக்கும் வகையில் ₹14.42 கோடி மதிப்பீட்டில் 5 சேமிப்பு தளங்கள் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ சுந்தர், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், நுகர்பொருள் வாணிபக் கழக காஞ்சிபுரம் மண்டல மேலாளர் அருள்வனிதா, துணை மேலாளர் பச்சையப்பன், உதவி மேலாளர் சுந்தர் வடிவேல், உதவி மேலாளர் தரக்கட்டுப்பாடு ஜெயவேல், ஒன்றிய குழு உறுப்பினர் சஞ்சய்காந்தி, கட்டவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலகம் அருள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
The post சிலாவட்டம், கட்டவாக்கம் ஊராட்சியில் ₹14.42 கோடி மதிப்பில் நவீன நெல் சேமிப்பு கிடங்குகள்: காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.
