×

ஏ.சி.சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து

திருப்போரூர், ஜன.1: திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் ஊராட்சி, அம்மாப்பேட்டை பகுதியில் மணி என்பவருக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் பிரகலாதன் (40) என்பவர் ஏ.சி., பிரிட்ஜ், வாசிங் மிஷின் சர்வீஸ் செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று காலை கடையை மூடிவிட்டு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விட்டார். அப்போது கடையில் இருந்து திடீரென புகை வந்தது.

தகவல் அறிந்து மணி வருவதற்குள் தீ மளமளவென கடை முழுவதும் பரவி ஏ.சி. மற்றும் பிரிட்ஜ் இயந்திரங்களில் இருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. இதனால் கடையில் இருந்த வாடிக்கையாளர்களின் பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. மேலும் அதே வளாகத்தில் இருந்த காபி ஷாப் ஒன்றின் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின. இதனால் அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.

இதையடுத்து திருப்போரூர் தீயணைப்பு படையினர் அங்கு வந்து சுமார் 3 மணி நேரம் ேபாராடி தீயை அணைத்தனர். முன்னதாக இந்த தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் சாலையோரத்தில் இருந்த மின் கம்பங்களில் இருந்த மின் வயர்களுக்கும் தீ பரவியதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 3 மணி நேரத்திற்கு பிறகு புதிய மின் வயர்கள் இணைக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags : Thiruporur ,Prahalathan ,Mani ,Ammapettai ,Nellikuppam panchayat ,
× RELATED மாமல்லபுரத்தில் புத்தாண்டு...