×

செய்யூர்- போளூருக்கு இடையே ₹1141 கோடி செலவில் 109 கி.மீ தூரம் இருவழிச் சாலை முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார்

வந்தவாசி, பிப். 21: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பனையூர் பகுதியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வழியாக போளூர் வரை 109 கி.மீ தூரம் இருவழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த 3 வருடங்களாக நடந்து வந்தது. கன்னியாகுமரி-சென்னை தொழில் வழி திட்ட சாலை என்ற பெயரில் நடந்த இந்த பணி முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. தலைமைச் செயலகத்தில் காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து தொழில் வழித்திட்ட சாலையை காணொலி மூலமாக பார்த்தார். நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் நடந்தது. அப்போது வந்தவாசியில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் வரவேற்று இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

டிஆர்ஓ ராமபிரதீபன் தலைமை தாங்கினார். எம்பிக்கள் ஆரணி எம்.எஸ் தரணிவந்தன், திருவண்ணாமலை அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரன் வரவேற்றார். இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பேசியதாவது: இந்த தொழில் வழி திட்டச்சாலை அமைந்ததால் வந்தவாசி, போளூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகள் பெரும் வளர்ச்சி அடையும். அதுபோல் தற்போது வந்தவாசி வழியாக சென்னைக்கு விரைந்து செல்லக்கூடிய சாலை வசதி உள்ளதால் தொழில் சாலைகள் பெருமளவில் இப்பகுதியில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. விவசாய நிலங்களும் பல மடங்கு மதிப்பு உயர்ந்துள்ளன என்றார்.

நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ஜலால், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் கார்த்திகேயன், நகர செயலாளர் தயாளன், ஒன்றிய செயலாளர்கள் ராதா, இளங்கோவன், சுந்தரேசன், பெருமாள், பழனி, இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர்கள் தினகரன், வினோத்குமார், ஒன்றிய பொருளாளர் ரமேஷ், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை தலைவர் விநாயகமூர்த்தி, விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் பட்டாபிராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முடிவில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

The post செய்யூர்- போளூருக்கு இடையே ₹1141 கோடி செலவில் 109 கி.மீ தூரம் இருவழிச் சாலை முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Seyyur ,Polur ,Vandavasi ,Seyyur Panaiyur ,Chengalpattu district ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED மகளை கடத்தி கள்ளக்காதலனுக்கு...