தியாகராஜநகர், ஜன.22: குடியரசு தின விழாவை முன்னிட்டு பாளையில் 600 மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சி ஒத்திகை நடத்தினர். குடியரசு தின விழா வரும் 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வஉசி மைதானத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றுகிறார். காவல்துறையினர், தீயணைப்பு படையினர், என்சிசி மாணவர்கள் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
இதனை முன்னிட்டு கலைநிகழ்ச்சியில் பங்குபெறும் மாணவ, மாணவிகளின் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் குழந்தை இயேசு பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 120 பேர், அம்பை ஏவிஆர்எம்வி பள்ளி மாணவர்கள் 120 பேர், பாளை இக்னேஷியஸ் மாணவிகள் 120 பேர், பாளை ராம்நகர் ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி 115 மாணவ, மாணவிகள் மற்றும் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 120 பேர் என 600 பேர் கலைநிகழ்ச்சி ஒத்திகை மேற்கொண்டனர். இந்த ஒத்திகையை மாவட்ட வருவாய் அதிகாரி சுகன்யா பார்வையிட்டார். மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியைகள் நடன பயிற்சி அளித்தனர்.
The post பாளையில் குடியரசு தின விழா கலைநிகழ்ச்சி ஒத்திகை appeared first on Dinakaran.
