×

அதிமுகவை கைப்பற்ற புதிய வியூகம் எடப்பாடிக்கு எதிராக அணி திரட்டும் சசிகலா: ஜெயலலிதா பிறந்தநாளில் உசிலம்பட்டியில் முக்கிய கூட்டம்; ஓபிஎஸ், மாஜிக்கள் பங்கேற்பு?

மதுரை: அதிமுகவை கைப்பற்றும் வகையில் எடப்பாடிக்கு எதிராக அணி திரட்டும் பணியில் சசிகலா இறங்கி உள்ளார். ஜெயலலிதா பிறந்தநாளில் உசிலம்பட்டியில் நடக்கும் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ், மாஜிக்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்கள் இல்லாததால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார். தொடர்ந்து நடந்த கட்சி நிகழ்ச்சிகளில் எடப்பாடியை மறைமுகமாக விமர்சித்தும், தவிர்த்தும் பேசி வந்தார்.

இவ்வளவு நாளாக கட்சிக்குள் இருந்த புகைச்சல் வௌிவரத் துவங்கியதும் கட்சியில் பெரும் குழப்பம் இருப்பது தெரிய வந்தது. செங்கோட்டையனின் கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் விமர்சித்து வரும் நிலையில், ஒரு சாரார் கட்சியில் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்ல வேண்டும். அனைவரும் இணைந்தால் தான் கட்சிக்கு எதிர்காலம். இல்லாவிட்டால் கட்சி காணாமல் போகும் நிலை ஏற்படும் என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசிவருகின்றனர். கட்சிக்குள் இந்த நிலைமை என்றால், கட்சிக்கு வெளியில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பலரும் கருத்து கூறிவருகின்றனர்.

குறிப்பாக ஓபிஎஸ், டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை தொடர்ந்து கூறி வருகின்றனர். இவர்களது கருத்திற்கு அதிமுக மாஜி அமைச்சர்களும், மாஜி எம்எல்ஏக்கள் பலரும் மறைமுக ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதனால், அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வழிநடத்துவது என்ற கோஷம் அதிமுகவிற்குள் வெளிப்படையாகவே வெளிவரத் துவங்கியுள்ளது. எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் சசிகலாவுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் செங்கோட்டையன் மற்றும் மாஜி அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் சசிகலாவுக்கு ஆதரவு தர தயாராக இருக்கின்றனர்.

இந்த சூழலில், முதல்கட்டமாக தென்மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முக்கிய நிர்வாகிகளை வெளிப்படையாக பேச வைப்பது என்ற முயற்சியில் டிடிவி.தினகரன் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக பலரிடமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனாலும் அதிமுக மாஜிகள் பலர் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படும் வரை அமைதியாக இருந்து, நடக்கும் பிரச்னையை கவனிப்பது என்ற முடிவிற்கு வந்துள்ளனர். இந்நிலையில், ெஜயலலிதாவின் 77வது பிறந்தநாள் வரும் 24ம் தேதி வருகிறது. இவரது பிறந்தநாளை இதுவரையில் அதிமுகவின் அனைத்து தரப்பினரும் தனித்தனியாக கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக சசிகலா, சென்னையில் இருந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த முறை வரும் 24ம் தேதி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடக்கும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் சசிகலா பங்கேற்கிறார். அங்கு ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் நடக்கும் விழாவில் பலருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த விழாவில் ஓபிஎஸ் அல்லது அவரது ஆதரவு உள்ளூர் தொகுதி எம்எல்ஏ அய்யப்பன் பங்கேற்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அதிருப்தியில் உள்ள அதிமுகவினரின் ஆதரவை பெற முடியும் என்றும், இதன்மூலம் எடப்பாடி தரப்புக்கு நேரடியாகவே நெருக்கடியை தர முடியும் என்ற பேச்சும் பரவலாக எழுந்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வரும் சசிகலாவிற்கு மதுரை காளவாசல் பகுதியில் இருந்து உசிலம்பட்டி வரையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிகளில் அதிமுகவினர் அதிகளவில் பங்கேற்கலாம் என சசிகலா தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சசிகலா ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஒருங்கிணைந்த அதிமுக என்பதை மையமாக வைத்து சசிகலா மதுரையில் இருந்து தனது அரசியல் காய் நகர்த்தலை தொடங்குகிறார். தென்மாவட்டங்களைச் சேர்ந்த மாஜி அமைச்சர்கள், மாஜி எம்பி, மாஜி எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் சசிகலாவுடன் இன்னும் தொடர்பில் தான் உள்ளனர். அவரால் பதவிக்கு வந்தவர்கள் தான் அதிகம். அவர்கள் உரிய சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கின்றனர். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அதிமுகவில் பலரது விருப்பமும் கூட. இதை சாத்தியப்படுத்துவதற்கான முயற்சியில் சசிகலா ஈடுபட்டுள்ளார்.
இதே நாளில் டிடிவி.தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் தென்மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர். முதல்கட்டமாக தென்மாவட்ட அதிமுகவை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

The post அதிமுகவை கைப்பற்ற புதிய வியூகம் எடப்பாடிக்கு எதிராக அணி திரட்டும் சசிகலா: ஜெயலலிதா பிறந்தநாளில் உசிலம்பட்டியில் முக்கிய கூட்டம்; ஓபிஎஸ், மாஜிக்கள் பங்கேற்பு? appeared first on Dinakaran.

Tags : Sasikala ,Edappadi ,AIADMK ,Usilampatti ,Jayalalithaa ,Magicians ,Madurai ,OPS ,MGR ,Dinakaran ,
× RELATED கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி...