
தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மூணாறு பகுதி மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும்.தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைக்காலங்களில் பெரியகுளம் பகுதியில் அடுக்கம்-கொடைக்கானல் மலைச்சாலை மற்றும் போடிமெட்டு மலைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டும்.
அதுபோல், கோடைக்காலங்களில் மூணாறு, போடி குரங்கணி போன்ற மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பரவுவதும் தொடர்கதையாக உள்ளது. கேரள மாநிலம் மூணாறு அருகே அமைந்துள்ளது மறையூரில் உள்ள முருகன் மலையில் கற்கால எச்சங்களான முனியறைகள், குகை ஓவியங்கள் உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளது. இது தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முருகன் மலையில் அமைந்துள்ள சிலுவையின் தாழ்வாரங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்தது. இதனால் பாறைகளுக்கு இடையே குகை ஓவியங்கள் புகை பிடித்து மங்கின. வரலாற்று சிறப்புமிக்க பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் குகை ஓவியங்களும், முனியறைகளும் சில நாட்களாக அழிவின் பிடியில் சிக்கி உள்ளது.
அதுபோல், போடி குரங்கணி மலைப்பகுதியான பிச்சாங்கரை வனப்பகுதியில் மான், காட்டுமாடு, முயல், போன்றவன விலங்குகள் உள்ளன. மேலும் அரியவகை மரங்களான, தேக்கு, குமில், சலவாகை போன்ற மரங்களும் உள்ளன. இந்த வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காட்டுத்தீ பரவி தொடர்ந்து எரிந்தது. இதில் விலை உயர்ந்த தேக்கு, சந்தனம், மருது, கருங்காலி, செங்கருங்காலி உள்ளிட்ட மரங்கள் எரிந்து நாசமாகின. மேலும், இப்பகுதியில் இருந்த வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தன. இந்நிலையில், ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள நாழிமலை மலைப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன், 7 இடங்களில் தீப்பற்றி இரவு முழுவதும் எரிந்தது. பின்னர் அதிகாலையில் ஏற்பட்ட பனியின் தாக்கத்தால் தீ கட்டுக்குள் வந்தது.
மர்மநபர்கள் நாழிமலை வனப்பகுதியில் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு பகுதிகளில் காட்டு தீ வேகமாக பரவியது. தகவல் அறிந்த ஆண்டிபட்டி தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் அந்தப் பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஏற்கனவே காட்டுத் தீ பற்றிய இடங்களில் இருந்த கங்குகளையும் அணைத்தனர். இதில் மலைப்பகுதியில் ஏராளமான மூலிகை மரங்கள் எரிந்து நாசமாகின.இந்த நிலையில் தீயை முழுவதுமாக அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறையினருக்கு சொந்தமான இந்த மலைப்பகுதியில் மீண்டும் காட்டு தீ பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது வெயில் காலம் தொடங்கிய நிலையில் வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ பரவும். பகல் மற்றும் இரவு நேரங்களில். எரியும், காட்டுத்தீயினால். அடிவாரப் பகுதிகளில். விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் வனத்துறையினர் இப்பகுதிகளை கண்காணித்து. விட்டு விட்டு எரியும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலம் துவங்கவுள்ளதால், இப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை அணைக்க தேவையான உபகரணங்களை வனத்துறையினருக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தமிழக-கேரள எல்லைப்பகுதியில் காட்டுத்தீயால் வனங்கள் அழியும் அபாயம்: வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.
