×

கொளத்தூர் சாய்வுதளத்தில் இருந்து குறிஞ்சி இயந்திரம் சுரங்க பணியை தொடங்கியது: மெட்ரோ அதிகாரிகள் தகவல்

சென்னை: கொளத்தூர் சாய்வுதளத்திலிருந்து குறிஞ்சி இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 5வது வழித்தடமான மாதவரம் பால் பண்னையில் தொடங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ நீளத்தில் 5 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 39 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளது. வழித்தடம் 5ல் பயன்படுத்தப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்களுக்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்களின் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளது.

வழித்தடம் 5ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி கொளத்தூர் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூர் நிலையம் வரை 246 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை நேற்று தொடங்கியுள்ளது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி ஜூன் 2025ல் சுரங்கம் தோண்டும் பணியை முடித்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி ஸ்ரீனிவாச நகர் நோக்கி 1.06 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படும்.

இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் முல்லை, மார்ச் 2025 இறுதிக்குள் சென்னை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வில்லிவாக்கம் ரயில் நிலையத்திலிருந்து வில்லிவாக்கம் பேருந்து முனையம் நோக்கி 603 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கும். மீதமுள்ள இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தள நிலைமைகளின் அடிப்படையில் சுரங்கம் அமைக்கும் பணியினை தொடங்கும். வழித்தடம் 5ல் கொளத்தூர் முதல் நாதமுனி வரையிலான 5 சுரங்கப்பாதை நிலையங்கள் உட்பட 3.9 கி.மீ நீளத்திற்கு ரட்டை சுரங்கப்பாதையுடன் 7.8 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) லிவிங்ஸ்டோன் எலியாசர், பொது ஆலோசகர் குழுத் தலைவர் டோனி புர்ச்செல், டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் பொறியாளர் உஸ்மான் ஷெரீப் ஆகியோர் சுரங்கம் தோண்டும் பணியினை பார்வையிட்டனர்.

The post கொளத்தூர் சாய்வுதளத்தில் இருந்து குறிஞ்சி இயந்திரம் சுரங்க பணியை தொடங்கியது: மெட்ரோ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kolathur slope ,Metro ,Chennai ,Kurinji ,Chennai Metro ,Madhavaram Milk Plant ,Koyambedu ,Porur ,Alandur ,Sholinganallur… ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்