கும்மிடிப்பூண்டி: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் கலெக்டர் பிரதாப் நேரடியாக கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல ஊராட்சிகளில் ஆய்வு செய்யப்போவதாக அரசு வட்டாரங்கள் இடையே தகவல் பரவியது. அதன்பேரில் வட்டாட்சியர், பிடிஓக்கள் மற்றும் கல்வித்துறை, அங்கன்வாடி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தங்கள் பணிகளை தீவிமாக செய்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று கலெக்டர் பிரதாப் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்களம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மேம்பால பணிகளை நடத்த வேண்டும் எனவும், தற்காலிகமாக தரைப்பாலத்தை உடனடியாக அமைக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு துறை சார்ந்த அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் கிழ்முதலம்பேடு ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தபோது, கிளிக்கோடி கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணிடம், உங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வந்துள்ளதா எனக் கேட்டறிந்தார்.
வரவில்லை என்றால் உடனடியாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் மேல்முதலம்பேடு ஊராட்சியில் உள்ள சொட்டுநீர் பாசனம் குறித்து தர்பூசணி பயிரிடும் இடத்தையும் ஆய்வு செய்தபோது, விவசாயிக்கு தேவையான கால்வாய் அமைக்கவும் மழைநீரை சேமித்து அணை கட்டவும் உத்தரவிட்டார். இதனையடுத்து அங்கன்வாடி மையத்தில் வருகைப் பதிவேட்டை பார்வையிட்டபோது, அதில் 73 பேர் பதிவாகியிருந்தது. ஆனால் ஆறு குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். இதுசம்பந்தமாக அங்கன்வாடி பணியாளர்களை கேட்டதற்கு பதில் கூறவில்லை.
இதே நிலைமை நீடித்தால் நீங்கள் பூந்தமல்லிக்கு பணி மாறுதல் செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தார். அங்குள்ள புதிய அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாக திறந்து குழந்தைகளை தங்க வைக்க உத்தரவிட்டார். பின்னர் கவரப்பேட்டை அரசுப் பள்ளியில் புதிய கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இதேபோல் பல கிராமங்களில் ஆய்வு செய்து அனைத்து துறை அதிகாரிகளை வரவழைத்து அரசு திட்டங்கள் பொது மக்களுக்கு சென்றடைய வேண்டுமென கடுமையாக எச்சரித்தார். மேலும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடிந்துகொண்டார்.
The post கும்மிடிப்பூண்டியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் பணிகளை உடனே முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.
