×

பெரியகுளத்தில் மாணவர்களுக்கான நிழற்குடையில் வாகன ஆக்கிரமிப்புகள்


தேனி, பிப்.19: பெரியகுளம் நகரை ஒட்டியுள்ள ஊராட்சி பகுதியாக கீழவடகரை ஊராட்சிக்குட்பட்ட ஸ்டேட்பாங்க் காலனி உள்ளது. இப்பகுதியில் ஸ்டேட்பாங்க் காலனி, சுந்தரராஜ் நகர், தாய்காலனி, ஐஸ்வர்யாநகர், கோல்டன்சிட்டி, ஆர்எம்.டி.சி காலனி, பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பெரியகுளம் நகரை ஒட்டியுள்ள பகுதியாகவும், பெரியகுளம் நகரின் விரிவாக்க பகுதியாகவும் உள்ளதால் இப்பகுதியில் நகர்புறங்களுக்கு இணையான வீடுகள் கட்டப்பட்டு அரசு துறை அதிகாரிகள், தனியார் வணிக நிறுவன உரிமையாளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

இத்தகைய அமைப்புடன் கூடிய இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு சென்று வருவதற்காக ஏராளமான மாணவ, மாணவியர் கூடுவதால், பெரியகுளம் நகர் எல்லையான வாரிஓடை பகுதியில் இருந்து கீழவடகரை ஊராட்சி நுழைவு பகுதியில் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இதனால் கீழவடகரை நுழைவு பகுதியான ஸ்டேட் பாங்க் காலனி-சுந்தர்ராஜ் நகர் நுழைவு பகுதியில் மாநில நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் கீழவடகரை ஊராட்சி சார்பில் ஊராட்சி பொதுநிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை மற்றும் 5 கடைகள் கட்டப்பட்டது. இதில் பயணிகள் நிழற்குடை முழுமையாக கட்டப்பட்டுள்ளது. அதேசமயம், 5 வணிக கடைகள் கட்டப்பட்டு இதற்கான கதவுகள் இன்னமும் அமைக்கப்படாமல் உள்ளது.

இதில் பயணிகள் நிழற்குடை உள்ள பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி பேருந்துகள் வந்து நிற்கவேண்டிய இடத்தில் வெவ்வேறு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பள்ளி பேருந்துகள் நிறுத்த முடியாத நிலை உள்ளது. இதேபோல, வணிக கடைகள் கட்டப்பட்ட நிலையில் இதற்கான கதவுகள் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் இக்கடை கட்டிடங்களில் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. எனவே, பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் கீழவடகரை ஊராட்சி நிர்வாகம், கட்டிமுடிக்கப்பட்டு கதவுகள் அமைக்கப்படாத கட்டிடங்களுக்கு கதவுகள் அமைத்து, அதனை முறையாக வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான நிழற்குடை பகுதியில் ஆக்கிரமிப்பு இல்லாதவாறு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post பெரியகுளத்தில் மாணவர்களுக்கான நிழற்குடையில் வாகன ஆக்கிரமிப்புகள் appeared first on Dinakaran.

Tags : Theni ,Statbank Colony ,Lower Nedakarya Uratchi ,Peryakulam ,Statebank Colony ,Sundarraj Nagar ,Daykalani ,Aishwaryanagar ,GoldenCity ,RM. D. ,C Colony ,Perumalpuram ,
× RELATED சென்னை குடிநீர் ஏரிகளில் 95.01% நீர் இருப்பு