×

சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் பூம்புகார் மாநில விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கும் மேற்பட்ட 9 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 9 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

2023-24ம் ஆண்டிற்கான வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை – தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் (தஞ்சாவூர் கலைத்தட்டு), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகோபால் (பஞ்சலோக சிற்பம்), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதா (நெட்டி வேலை), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பலராமன் (சுடுகளிமண் சிற்பம்), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாகமுத்து ஆச்சாரி (மரச்சிற்பம்), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (தகட்டு வேலை), திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹம்சா பீவி (பனை ஓலை பொருட்கள்), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (பஞ்சலோக சிலைகள்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லில்லி மேரி (மூங்கில் பாயில் ஓவியம்) ஆகிய 9 விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் , வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் தகுதிச்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

அதேபோல், 2023-24ம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை – சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (உலோக சிற்பம்) மற்றும் குணசுந்தரி (காகிதக் கூழ் பொம்மைகள்), காத்தான் (தஞ்சாவூர் ஓவியம்) மற்றும் மெய்யர் (சுடு களிமண் சிற்பம்), செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் (மரச்சிற்பம்) மற்றும் ஸ்ரீதர் (தேங்காய் ஓடு பொருட்கள்), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (பனை ஓலை பொருட்கள்), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணகுமார் (காகித கூழ் பொம்மைகள்), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் (கண்ணாடி கலைப்பொருட்கள்) ஆகிய 9 விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் அமுதவல்லி, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநர் அமிர்த ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் பூம்புகார் மாநில விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Living Craft Treasure Poompuhar State Awards to ,Craftsmen ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Chennai Secretariat ,Tamil Nadu Handicrafts Development Corporation ,Living Craft Treasure Awards ,Living Craft Treasure Poompuhar State Awards ,Dinakaran ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்