×

புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் நள்ளிரவில் முடிவெடுப்பது அநாகரிகம்: ராகுல் காந்தி கடும் கண்டனம்

புதுடெல்லி: புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் முடிவை நள்ளிரவில் வெளியிடுவது அநாகரிகமானது, பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அவமரியாதையானது’ என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, புதிய தலைமை தேர்தல் ஆணையரை முடிவு செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்றனர். இதில், கடந்த ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஞானேஷ் குமார் புதிய தலைமை தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தேர்தல் ஆணையர்களை தேர்நதெடுக்கும் தேர்வுக்குழு மற்றும் அதன் செயல்முறை குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளதால் 48 மணி நேரம் காத்திருந்து முடிவெடுக்க வேண்டுமென கூட்டத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தியது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி முர்மு முறைப்படி அறிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட உள்ள நிலையில், அவசர அவசரமாக நள்ளிரவில் புதிய தலைமை தேர்தல் ஆணையர் அறிவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் ஒரு குறிப்பு மூலமாக எனது எதிர்ப்பை பதிவு செய்தேன்.

அதில், ‘நிர்வாக தலையீடு இல்லாத சுயாதீனமான தேர்தல் ஆணையத்தின் மிக அடிப்படையான அம்சம், தேர்தல் ஆணையர் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை’ என குறிப்பிட்டிருந்தேன். ஆனால், புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் நள்ளிரவில் எடுத்த முடிவு அவமரியாதையான செயல். அது அநாகரிகமானது. தேர்வுகுழுவின் அமைப்பு மற்றும் தேர்வு செயல்முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 48 மணி நேரத்தில் விசாரிக்கப்பட உள்ள நிலையில் அவசர அவசரமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்குழுவில், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, தலைமை நீதிபதியை நீக்கியதன் மூலம் மோடி அரசு தேர்தல் செயல்முறையின் நேர்மை குறித்து கோடிக்கணக்கான வாக்காளர்களின் கவலையை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், அம்பேத்கரின் கொள்கைகளை நிலைநிறுத்துவதும், அரசாங்கத்தை பொறுப்பு கூற வைப்பதும் எதிர்க்கட்சித் தலைவராக எனது கடமை.
இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதே போல காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அளித்த பேட்டியில், ‘‘புதிய தலைமை தேர்தல் ஆணையர் அவசரமாக தேர்வு செய்யப்பட்டிருப்பது, உச்ச நீதிமன்றத்தின் ஆய்வைத் தவிர்த்து, தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாக நியமனத்தை முடிக்க அவர்கள் ஆர்வமாக இருப்பதைக் காட்டுகிறது. இதுபோன்ற மோசமான நடத்தை, ஆளுங்கட்சி எவ்வாறு தேர்தல் செயல்முறையை அழித்து, அதன் நலனுக்காக விதிகளை வளைக்கிறது என்பது குறித்து பலர் வெளிப்படுத்தியுள்ள சந்தேகங்களை உறுதிப்படுத்துகிறது’’ என்றார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜ ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன் பிரதமரின் பரிந்துரை அடிப்படையிலேயே தேர்தல் ஆணையர்களை ஜனாதிபதி நியமித்து வந்தார்.

இதற்காக ஒரு செயல்முறை உருவாக்கும் வரையிலும் தேர்வுக்குழுவில் தலைமை நீதிபதி இடம் பெற வேண்டுமென்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. இந்த தீர்ப்பு தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவு எந்த இடத்திலும் மீறப்படவில்லை. முன்பை விட இப்போது தேர்தல் ஆணையர்கள் நியமனம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அரசியலமைப்பு ஆணையை குறைமதிப்பிற்கு உட்படுத்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார்’’ என்றார். இதே கருத்தை கூறி உள்ள ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘காங்கிரஸ் ஆட்சியில் தேர்தல் ஆணையர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்கள் என்பதை ராகுல் மறந்து விட்டாரா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

* ஞானேஷ் குமார் இன்று பதவியேற்பு

தேர்தல் ஆணையத்தின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவியேற்க உள்ளார். இவரது பதவிக்காலம் 2029 ஜனவரி 26 வரை இருக்கும். அப்போது அவர் 65 வயதை எட்டுவதன் மூலம் ஓய்வு பெறுவார். எனவே, அடுத்த மக்களவை தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கும் வரையிலும் ஞானேஷ் குமார் பதவியில் இருப்பார். மேலும் ஞானேஷ் குமார் தனது பதவிக் காலத்தில், இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டப்பேரவை தேர்தல், 2026ல் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்களை நடத்த உள்ளார். சட்டப்பேரவை தேர்தல் தவிர, 2027ல் குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலையும் நடத்த உள்ளார்.

* தேர்தல் ஆணையர் விவேக் ஜோஷி

தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் இருப்பார்கள். ராஜீவ்குமார் ஓய்வு பெற்றதால், ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, விவேக் ஜோஷி புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்களாக சுக்பிர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் செயல்படுவர். ஜோஷியின் நியமனத்தை தொடர்ந்து 3 ஆணையர்களை கொண்ட முழு அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஜோஷி அரியானா மாநில தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டவர்.

The post புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் நள்ளிரவில் முடிவெடுப்பது அநாகரிகம்: ராகுல் காந்தி கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner ,Rahul Gandhi ,New Delhi ,Lok Sabha ,Home Minister ,Rajiv Kumar ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...