புதுடெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் இரண்டு ரிட் மனுக்களும், அதேப்போன்று துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் ஒரு ரிட் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘மசோதாக்களை மீண்டும் சட்ட பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பிறகு அதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்று அரசியல் சாசன பிரிவு 200 கூறுகிறது.
மசோதாக்களை நிறுத்தி வைக்கும் வகையில் நான்காவதாக முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்ற ஒன்றிய அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். அப்படி அரசியல் சாசனம் கூறவில்லை என முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக தெரிவித்துள்ளது. குறிப்பாக அமைச்சரவை முடிவின்படி தான் ஆளுநர் செயல்பட முடியும். அப்படி தான் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனிப்பட்ட எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. மேலும் சட்டப்பேரவையின் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. சட்டப்பேரவையில் மறுநிறைவேற்றம் செய்த மசோதாவுக்கு ஆளுநர் கட்டாயம் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும்.
ஆளுநர் மசோதாக்கள் மீது அறிவுரை கூற முடியுமே தவிர, அவரே அந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது. அதேப்போன்று துணைவேந்தர்கள் நியமன விவகாரத்திலும் ஆளுநர் தனக்கான சொந்த அதிகாரத்தை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். எனவே இந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவி மற்றும் அவருக்கு ஆதரவான ஒன்றிய அரசின் வாதங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு சட்டபேரவையின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி வாதங்களை நிராகரிக்க வேண்டும்: தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் appeared first on Dinakaran.
