திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அரசு நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவனை சீனியர் மாணவர்கள் உடலை காம்பசால் கீறி ராகிங் செய்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவனந்தபுரம் அரசு கல்லூரியில் ஒரு மாணவனை கை, கால்களை கட்டி போட்டு அடித்து சித்ரவதை செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. கேரளாவில் கல்லூரிகளில் ராகிங் சம்பவம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வருடம் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் படித்த சித்தார்த்தன் என்ற மாணவன் ராகிங் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சில தினங்களுக்கு முன்பு கோட்டயம் அரசு நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை 3ம் ஆண்டு மாணவர்கள் உடலில் காம்பசால் கீறி கொடூரமான முறையில் ராகிங் செய்த சம்பவம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மாணவர்களின் படிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மற்றும் கேரள மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், திருவனந்தபுரம் காரியவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஒரு மாணவன் ராகிங் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படிக்கும் பின்ஸ் ஜோசப் என்பவர் இது தொடர்பாக 3ம் ஆண்டு படிக்கும் 7 மாணவர்கள் மீது கழக்கூட்டம் போலீசில் புகார் செய்துள்ளார். தன்னை தினமும் கை, கால்களை கட்டி போட்டு அடித்தும், முட்டி போட்டு நிற்க வைத்தும் கொடுமைப்படுத்தியதாகவும், குடிக்க தண்ணீர் கேட்டபோது எச்சிலை துப்பி குடிக்க வைத்தாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து 3ம் ஆண்டு மாணவர்களான அலன், அனந்தன், வேலு, சல்மான், சிராவண், இமானுவேல் மற்றும் 2ம் ஆண்டு மாணவன் பார்த்தன் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கேரளாவில் கல்லூரிகளில் தொடரும் ராகிங் : அரசு கல்லூரியில் கை, கால்களை கட்டி மாணவனை சித்ரவதை செய்த அவலம்.! 7 மாணவர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.
