×

ஒன்றிய அமைச்சரின் ஆணவ பேச்சுக்கு ஒற்றுமையாக இருந்து முடிவு கட்ட வேண்டும்: ப.சிதம்பரம் டிவிட்

சென்னை: மும்மொழி கொள்கை விவகாரத்தில், தமிழக மக்கள் ஒற்றுமையாக இருந்து ஒன்றிய அமைச்சரின் ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம். அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரியாது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது, அரசியல் சாசனம் உருவாகிய வரலாறும் தெரியாது என்பவற்றை அவருடயை ஆணவப் பேச்சு காட்டுகிறது.

மாநில அரசின் மொழிக் கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில அரசின் உண்மை இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கை தான் பின்பற்றப்படுகிறது என்பது அவருக்குத் தெரியுமா? இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும் தந்த உறுதிமொழிகளையாவது அவருக்குத் தெரியுமா?. நாடாளுமன்றம் அனுமதித்த நிதியை இந்தி மொழியைக் கற்பிக்காத மாநிலத்திற்கு தரமாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவருக்குத் தெரியுமா? தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஒன்றிய அமைச்சரின் ஆணவ பேச்சுக்கு ஒற்றுமையாக இருந்து முடிவு கட்ட வேண்டும்: ப.சிதம்பரம் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,p. ,Chidambaram Dvid ,Chennai ,Tamil Nadu ,Chidambaram ,Former ,Senior Congress ,President ,P. Chidambaram ,EU ,minister ,p. Chidambaram Dvid ,
× RELATED மென்மையான போக்கை கடைபிடிப்பதால் கோழை...