
குழந்தைகளுக்கு கண் திருஷ்டி கழித்தலை எந்த நாளில் செய்யலாம்?
– ஆர்.வித்யா ராம்பிரசாத், மதுரை.
குழந்தைகளுக்கு கண் திருஷ்டி கழித்தலை ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செய்வது சிறப்பானது.
?எதை பேசக்கூடாது?
– பா.கணபதி, கெருகம்பாக்கம் – சென்னை.
1. இல்லாத ஒருவரைப் பற்றி தவறாக பேசக் கூடாது.
2. தற்பெருமை பேசக் கூடாது. தற்பெருமை பேசுகிறவர் தன்னைத் தானே ஏமாற்றி கொள்கிறார். தற்பெருமை தற்கொலைக்குச் சமம் என்கிறது மகாபாரதம்.
?இறைவனுக்கு தொண்டு செய்வது சிறப்பானதா? இறையடியார்களுக்கு தொண்டு செய்வது சிறப்பானதா?
– சி.சரஸ்வதி, மேலகரம் – தென்காசி.
இறைவனுக்குத் தொண்டு செய்வது சிறப்பானதுதான். ஆனால், அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. அனுமனும் லட்சுமணனும் ராமனுக்குத் தொண்டு செய்தார்கள். இதைப் போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்குமா? ஆனால், இறையடியார்களுக்கு தொண்டு செய்வது எளிதாயிற்றே! அதன் மூலம் இறைவன் அருளை எளிதாகப் பெறலாமே! அதனால் தானே “கூடும் அன்பில் கும்பிடல் அன்றி வீடும் வேண்டாம்’’ (எனக்கு கைலாயம் போன்ற விஷயங்கள்கூட வேண்டுவதில்லை அடியார்கள் தொடர்பு போதும்) என்று ஆன்றோர்கள் சொன்னார்கள்.
பகவான், தொண்டரடிப்பொடியாழ்வாரிடம் “உமக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்கிறார். ஆழ்வார், “உன் அடியார்களுக்கு என்னை ஆட்படுத்த வேண்டும்’’ என்று கேட்கிறார். அதனால் விப்ர நாராயணர் என்ற இயற்பெயர் மாறி, தொண்டரடிப்பொடி என்ற பெயர் நிலைத்தது. எப்படிப் பார்த்தாலும் இறையடியார் தொண்டே முதன்மையானது.
?சுகப்பிரசவம் நடக்க என்ன ஸ்லோகம் சொல்லலாம்?
– ஆதிலட்சுமி, ராஜபாளையம்.
பகவான் கண்ணனை நினைத்துக் கொள்ளுங்கள். “வசுதேவ சுதம் தேவம் கம்ச சாணூர மர்தனம் தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்” என்ற ஸ்லோகம் சொல்லுங்கள். திருச்சிராப்பள்ளி தாயுமானவஸ்வாமியை பிரார்த்தனை செய்யுங்கள். அம்பாளை வணங்குபவர்களுக்கு இந்த ஸ்லோகம் உதவும்.
“நமஸ்தேஸ்து ஜகன்மாத: கருணாம்ருத ஸாகரே
கர்ப்ப ரக்ஷாகரி தேவி ஸுகப்ரசவ மேவஹி!’’
இந்த ஸ்லோகத்தைச் சொல்லி அம்பிகையை தினமும் வழிபடுங்கள். “உயிர்களுக்கெல்லாம் தாயாக இருப்பவளே! கருணைக் கடலாகத் திகழ்பவளே! கருவில் உள்ள உயிரைக் காப்பவளே! சுகப்பிரசவம் நடக்க அருள்புரிவாய்’’ என்பது இந்தச் ஸ்லோகத்தின் பொருள்.
?ஜாதகர்மா என்று ஒரு சடங்கைச் சொல்லுகின்றார்களே? அது எப்பொழுது செய்ய வேண்டும்?
– ப்ரீதிகுமாரஸ்வாமி, கடலூர்.
ஜாதகர்மா என்றால் குழந்தை பிறந்தவுடன் செய்யவேண்டிய சடங்கு. ஒருவன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை பலவிதமான சடங்குகள் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதில் பிறந்த குழந்தைக்குச் செய்யும் முதல் சடங்கு இந்த ஜாதகர்மாதான். தொப்புள் கொடி அறுப்பதற்கு முன் இந்தச் சடங்கு செய்ய வேண்டும். ஆனால், இப்பொழுது அதற்கான அமைப்போ, அவகாசமோ இல்லை. அதனால், 11ம் நாள் புண்ணியாகவாசனம் செய்து, நாமகரணம் செய்யும்பொழுது, சேர்த்துச் செய்து கொள்கிறார்கள்.
?குழந்தைக்கு திருஷ்டி சுத்தும் பொழுது எப்படிச் சுற்ற வேண்டும்? இடம் வலமா? வலம் இடமா?
– பரமேஸ்வரி, முசிறி.
முதலில் பிரதட்சணமாக மூன்று முறையும், அப்பிரதட்சணமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும். இப்பொழுது சிலர் அப்பிரதட்சணமாகவே சுற்றி போட்டு விடுகின்றார்கள். அதைப் போலவே சுபகாரியங்களில் ஆரத்தி எடுக்கின்ற பொழுது, பிரதட்சணமாக சுற்றினால் போதும். சிலர், அதிலும் அப்பிரதட்சணமாக சுற்றுகின்றார்கள். கூடாது.
?கோயில்களில் எதிர் சுற்றாக சுற்றலாமா?
– எழிலரசி, மார்த்தாண்டம்.
சுற்றக் கூடாது. அப்படி எதுவும் விதிகள் இருப்பதாகத் தெரியவில்லை. விதிப்படி செய்வது வேறு. விருப்பப்படி செய்வது வேறு. நம்முடைய முன்னோர்களும் குருமார்களும் எதை செய்தார்களோ, அதைத் தான் நாம் பின்பற்ற வேண்டும். ஆனால், ஒரு விஷயம். கோயில் பிரகாரங்களை வலம் வரும்போது ஜெட் வேகத்தில் வலம் வருவதும் தவறு.
?நாம் நிறைய புத்தகங்களைப் படிக்கின்றோம். ஒரு புத்தகம் சிறந்த புத்தகம், அதை அவசியம் படிக்க வேண்டும் என்பதை எதை வைத்துக் கொண்டு முடிவெடுப்பது?
– மதனகோபாலன், ஸ்ரீவில்லிப்புத்தூர்.
ஆன்றோர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கின்றார்கள். நாம் படிக்கக் கூடிய புத்தகம் நமக்கும், நம்முடைய ஆத்மாவுக்கும் பலம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு அந்த நூலுக்கு மூன்று விதமான சிறப்புகள் இருக்க வேண்டும்.
1. சொன்னவர் யார்?
2. சொன்ன விஷயம் என்ன?
3. அதை யார் கேட்டார்கள்?
– என்ற மூன்று கேள்விகளுக்கும் நல்ல முறையில் பதில் அமைய வேண்டும்.
இப்படி இருந்தால்தான் அது நமக்கு உதவக்கூடிய புத்தகம். அப்படிப்பட்ட புத்தகங்கள்தான் திருக்குறள், பகவத்கீதை, தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலிய நூல்கள்.
?வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்க யாரை வழிபடலாம்?
– சிவசக்தி, திருச்சி.
உங்கள் பக்கம் நியாயம் இருந்தால், சிவில் வழக்காக இருந்தால் வராகரையும், கிரிமினல் வழக்காக இருந்தால் சக்கரத்தாழ்வாரையும் வழிபட, நல்ல தீர்ப்பு கட்டாயம் கிடைக்கும்.
?வாழ்க்கையில் வலியும் துன்பமும் தொடர்கிறதே?
– ஆனந்தி சுப்ரமணியம், ஸ்ரீரங்கம்.
பொதுவாக வலியும் துன்பமும் நாம் விரும்பாததாக இருப்பினும், அது வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. பல நேரங்களில் வலிக்கு வலியேகூட மருந்தாகிறது. தேவைப்படுகிறது. உதாரணமாக, வயிற்றில் கட்டி என்றால் துடிக்கிறோம். உடனே மருத்துவர் வயிற்றைக் கத்தியால் கிழிக்கிறார் வலிக்கிறது. அந்த வலி போக, இந்த வலியைப் பொறுத்துக் கொள்ளச் சொல்கிறார். என்ன செய்வது? வலி கஷ்டத்தைத் தந்தாலும், மன வலிமையையும் தரவே செய்கிறது. ஒரு விஷயத்தை Negative ஆக எடுத்துக் கொள்வதால் பயனில்லை, Positive ஆக எடுத்துக் கொள்வதால், சில நேரங்களில் பலனில்லாவிட்டாலும் துக்கம் குறைகிறது.
?சிறியவர்கள் அறிவுரை சொல்லலாமா?
– டி.ராஜவேல், வெங்கட்வாசபுரம் – பெரம்பலூர்.
அறிவுரையை யாரும் சொல்லலாம். இளம் வயதில் நல்ல அறிவும் தெளிவும் இருந்தால், ஞானத்தில் அவர் மூத்தவராகவே கருதப்படுவார். எனவே, சிறுவர்கள் அறிவுரை சொல்வதில் பிழை இல்லை. ஆனால், சிறுவர்கள் அறிவுரை சொல்லும்படி பெரியவர்கள் நடந்து கொள்ளக் கூடாது. பேராசிரியர் ஒருவருக்கு பொடிபோடும் பழக்கம் வெகுகாலமாக இருந்தது. இதைச் சகிக்காத அவர் மகன், ஒருமுறை நேரடியாகவே சொல்லிவிட்டார். “இந்தச் சனியனை விட்டுத் தொலையேன்’’ என்று அன்றோடு பேராசிரியர் பொடி போடும் பழக்கத்தை விட்டுவிட்டார். அறிவுரையை ஏற்றுக் கொண்டால் பெரியவர் இன்னமும் பெரியவராகிவிடுவார்.
?திருக்கோட்டியூர் கோபுரம் மதில் மீது நின்று எல்லோருக்கும் மந்திரம் சொன்னதால்தான் ராமானுசருக்குப் பெருமையா? இந்த மந்திரம் உண்மையாலும் எல்லோரையும் கரை சேர்த்துவிடும் என்பதை இன்றைய சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா?
– தீபக், சென்னை.
நீங்கள் சொல்லும் நிகழ்வு, ராமானுஜருடைய விசாலமான இதயத்தையும், அதில் பூத்த மனிதாபிமானத்தையும் காட்டும் நிகழ்வு. திருக்கோட்டியூர் மதில் மீது நின்று சொல்லப்பட்ட மந்திரம், கரையேற்றுமா ஏற்றாதா என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். அதுவல்ல… பிரதானமான விஷயம், அந்த மந்திரம் யாருக்கும் சொல்லப்படாமல், ஓராண் வழி உபதேசமாய் காப்பாற்றப்பட்டது. அதைத் தெரிந்து கொள்ள ராமானுஜர் படாதபாடுபட்டார். கடைசியில் அதைச் சொல்லிக் கொடுக்கும்போது, இதை என் அனுமதியின்றி பிறருக்குச் சொன்னால் நரகம் கிடைக்கும். எனவே சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கினார் குரு.
ராமனுஜரின் சிந்தனை எளிய மக்களை நோக்கியதாக மாறியது. இந்த மந்திரத்தின் பெருமையை அறிய எல்லோரும் முயற்சிக்க வேண்டும். அதற்காக, தான் பட்ட மாதிரியே பலமுறை கஷ்டபட வேண்டும். இதெல்லாம் நடக்குமா? இத்தனை மக்கள் ஒரு சேர நலம் பெற முடியாதா? என்ற தவிப்பும், மக்கள் மீது கொண்ட காதலும், குருவின் ஆணையை மீற வைத்தது. தனக்கு ஓரளவு நன்மையெனில் பிறருக்கு எத்தகைய தீமையும் செய்யத்துணியும் உலகில், தனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை, இத்தனை மக்கள் உய்வு பெறுவார்களே என்று நினைக்க வைத்த ராமானுஜரின் மனமும், அதில் மலர்ந்த நேயமும் இருக்கிறதே அதுதான் முக்கியம்!
அதைவிட முக்கியம் இதைக் கேள்விப்பட்ட ஆசாரியர் திருக்கோட்டியூர் நம்பிகள் வந்து கேட்கிறார்.
“ஊரவர்க்குச் சொல்லி உமக்கு என் பெற்றீர்?’’
“நரகம் பெற்றேன்!’’
“தெரிந்துமா துணிந்தீர்! காரணம்?’’
“நான் நரகம் பெற்றாலும், தேவரீர் அருளிய மந்திர பலத்தால் இவர்கள் (எளிய மக்கள்) நலம் பெறுவார்களே!’’ ஒரு கணம் ராமானுஜரின் விழிகளை உற்றுப் பார்க்கிறார் திருக்கோட்டியூர் நம்பி. அடுத்த கணம் அவரைக் கட்டி அணைக்கிறார். “உமக்குள்ள அந்த ஈர நெஞ்சு எமக்கு இல்லாமல் போய்விட்டதே!” என்று சொல்லிவிட்டு ராமானுஜரை “எம்பெருமானரே!’’ என்று அழைத்தார். மந்திரம் நம்பியவர்களைக் காப்பாற்றும் அன்பும் மனிதநேயமும், நம்பாதவர்களையும் காப்பாற்றும்.
ராமானுசரின் புகழும், பெருமையும் மந்திரத்தால் அல்ல, மந்திரத்தைச் சொல்லத் துணிந்த மனித நேயத்தால் பிரகாசித்தது. அதனால்தான் அவரின் சீடர் திருவரங்கத்து அமுதனார்.`காரேய் கருணை ராமானுஜா! இக்கடலிடத்தில் ஆரே அறிவர் நின் அருளின் தன்மை!’’ எனப்பாடினார்.
The post குழந்தைகளுக்கு கண் திருஷ்டி கழித்தலை எந்த நாளில் செய்யலாம்? appeared first on Dinakaran.
