×

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

பெரம்பூர், பிப். 16: சிஎம்டிஏ சார்பில் 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள், வரும் டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரியை அமைச்சர் பி.கே.பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர், ஏரியின் ஓரமாக வசிக்கும் 81 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து உயர் அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் சிஎம்டிஏ சார்பில் 13 ஏரிகளை புனரமைத்து அழகுபடுத்தும் பணி ₹250 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இதில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த ஏரியிலும் இந்த புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், செங்குன்றம் பகுதி வாயிலாக தணிகாசலம் கால்வாய்க்கு மழைநீரை கொண்டு செல்வதற்கு வடிகால் வடிவமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து ஆய்வு செய்துள்ளோம். இதில் கால்வாய் ஓரமாக உள்ள 81 வீடுகள் ஏற்கனவே கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி, அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறகு, இந்த 2 ஏக்கர் நிலப்பரப்பு நிலத்தில் நடைபாதை, பூங்கா போன்றவற்றை அமைத்து, மழைநீர் வருகின்ற நீர்வழி தடத்தை ஏற்படுத்தி, வெள்ள பாதிப்பை தடுக்க திட்டமிட்டு இருக்கின்றோம். ஆலந்தூர் ஏரியில் கழிவுநீர் கலக்கின்ற சூழல் இருப்பதால், அங்கு மறுசுழற்சி செய்கின்ற முறையில் சென்டர் நிறுவுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கின்றோம். இந்த ஏரிகளை நாங்கள் முழுவதுமாக புனரமைத்த பிறகு கழிவுநீர் இதில் கலப்பதை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். இந்த 13 ஏரிகளின் புனரமைப்பு பணிகளும் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் கணேசன், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன் குமார், திரு.வி.க.நகர் மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், கண்காணிப்பு பொறியாளர்கள் ராஜ மகேஷ்குமார் (சிஎம்டிஏ), பொதுப்பணி திலகம் (நீர்வள ஆதாரத்துறை), இளம்பருதி (தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்), ராதாகிருஷ்ணன் (சென்னை குடிநீர் வழங்கல் துறை), மாநகராட்சி மண்டல அலுவலர் முருகன், செயற் பொறியாளர்கள் ராஜன்பாபு, செந்தில்நாதன், மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜன், சாரதா, தாவூத்பீ, அமுதா, ஸ்ரீதனி, உள்ளாட்சி பிரதிநிதிகள் ஐ.சி.எப். முரளிதரன், சந்துரு, மகேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Development Authority ,Minister ,P.K. Sekarbabu ,Perambur ,CMDA ,Kolathur lake ,P.K. Sekarbabu… ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்