தஞ்சாவூர், பிப். 13: காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரே சமயத்தில் பல பகுதிகளில் சம்பா அறுவடை நடப்பதால் வைக்கோல் விலை போகாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நடப்பாண்டில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது பல்வேறு பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதுவரை சுமார் 60 சதவீதத்திற்கு மேல் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடை நடப்பதால் வைக்கோல் வாங்க ஆளில்லாமல் வயலிலேயே தேங்கி கிடக்கிறது. ஒரு சிலர் வைக்கோல் வாங்கினாலும் மிக குறைந்த விலையில் வாங்கி செல்வதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
ஒரு கட்டு வைக்கோல் கட்டுவதற்கு ரூ.35 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் மிகவும் குறைவாக ரூ.20 முதல் ரூ.30க்கு ஒரு கட்டு வைக்கோல் விலை போகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இரவில் கடும் பனிப்பொழிவும் பகலில் கடும் வெயில் அடிப்பதால் வைக்கோல் நிறம் மாறி, தரத்தையும் இழந்து வருகிறது. இதனால் அறுவடை முடிந்த உடனேயே வைக்கோல் போதிய விலைக்கு விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் நிலை உள்ளது. ஆனால் அறுவடை முடிந்து பல நாட்களாக வைக்கோல் வயல்களில் தேங்கி கிடப்பதால் கடும் நட்டத்தை விவசாயிகள் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஒரு காலத்தில் டெல்டா மாவட்டங்களில் கால்நடை வளர்ப்பு அதிக அளவில் இருந்ததால் இதற்கு வைக்கோல் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கால்நடை வளர்ப்பு குறைந்து போனதால் வைக்கோல் தேவை கிராமங்களில் இல்லை. கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு தமிழக வைக்கோல் கொண்டு செல்லப்படுகிறது. எனவே உடனடியாக தமிழக அரசு வைக்கோல் கொள்முதல் செய்து மற்ற மாநிலங்களில் விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரே சமயத்தில் சம்பா அறுவடையால் வயலிலேயே தேங்கி கிடக்கும் வைக்கோல் appeared first on Dinakaran.
