×

எமதண்டீஸ்வரர் கோயிலில் விக்கிரம சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு

விழுப்புரம், பிப். 13: விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே அமைந்துள்ளது ஆலகிராமம். இங்குள்ள எமதண்டீஸ்வரர் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோயில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று பணியின்போது மண்ணுக்குள் புதைந்திருந்த 3 துண்டுக் கல்வெட்டுகள் கிடைத்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் இக்கல்வெட்டுகளை ஆய்வு செய்து இவை விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்தவை என கூறினார்.

இதுதொடர்பாக ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது: எமதண்டீஸ்வரர் கோயில் வளாகத்தில் கண்டறியப்பட்டுள்ள முதல் துண்டுக் கல்வெட்டில் “ஸ்வஸ்தி  பூமாது புணர புவிமாது வளர நாமாது ரி சுடரளவும் ஒரு குடை நிழற்ற வீர ஸிம்ஹாஸனத்’’ என்று வாசகங்கள் தொடங்குகிறது.இரண்டாவது கல்வெட்டில், “ரிமையில் மணிமுடி சூடச் செங்கோல் சென்” எனவும், மூன்றாவது கல்வெட்டில், “வு திசை தொறுஞ் செல்ல வெங்கலி நீங்கி மெ’’ எனும் வாசகங்கள் காணப்படுகின்றன. இவற்றை வாசித்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால், இவை சோழ மன்னனான விக்கிரம சோழனைக் குறிப்பிடும் மெய்க்கீர்த்தி வாசகங்கள் எனத் தெரிவித்துள்ளார். கல்வெட்டு துண்டுத் துண்டாக இருப்பதால் இதன் ஆண்டு உள்ளிட்ட விவரங்களை அறிய முடியவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் சித்தலிங்கமடம், பிரம்மதேசம், திருவாமாத்தூர் உள்ளிட்ட இடங்களில் கி.பி.1120 முதற்கொண்டு கி.பி.1133 வரையிலான காலக்கட்டங்களில் விக்கிரம சோழனின் கோயில் திருப்பணிகள் நடந்துள்ளன. இதே காலத்தில், சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு ஆலகிராமம் பகுதியிலும் திருப்பணிகள் நடந்திருக்கலாம். ஆலகிராமத்தில் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட துண்டுக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், வட்டெழுத்துடன் கூடிய விநாயகர், பல்லவர் கால லகுலீசர், ஐயனார் உள்ளிட்டச் சிற்பங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. தற்போது கண்டறியப்பட்டுள்ள விக்கிரம சோழன் கல்வெட்டு இந்த ஊரின் வரலாற்றுக்குப் புதிய வரவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post எமதண்டீஸ்வரர் கோயிலில் விக்கிரம சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Vikrama Chola ,Emadhandeeswarar ,temple ,Villupuram ,Aalagramam ,Mayilam ,Villupuram district ,Kumbabhishekam ,Emadhandeeswarar temple ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு