×

ஆத்தூர் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு ஓட்டுநரே காரணம் : தமிழ்நாடு போக்குவரத்து கழகம் விளக்கம்

சேலம் : ஆத்தூர் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு ஓட்டுநரே காரணம் என தமிழ்நாடு போக்குவரத்து கழக சேலம் மண்டலம் நிர்வாக இயக்குநர் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். சேலம் மண்டலம் ஆத்தூர் கிளையை சார்ந்த நகர பேருந்து TN30/N0813 ஆத்தூர் பேருந்து நிலையத்தில் 12.02.2025 இன்று காலை 08.10 மணிக்கு புறப்பட்டு தவளைப்பட்டி செல்லும்பொழுது கல்லுக்காடு என்ற இடத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தினை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர். சேலம் அவர்கள் தொழில்நுட்ப குழுவினருடன் நேரடியாக சென்று ஆய்வு செய்தபோது அப்பேருந்தின் பிரேக் நல்ல நிலையில் வேலை செய்வது உறுதி செய்யப்பட்டது. மேலும், இவ்விபத்திற்கு ஓட்டுநர் அலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியதால்தான் ஏற்பட்டது என ஆய்வில் கண்டறியப்பட்டு அப்பேருந்தின் நடத்துநர் மூலமும் மேற்படி ஓட்டுநர் அலைபேசியில் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கியதை உறுதி செய்யப்பட்டது. மேலும் இத்தகவல் காவல் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

எனவே. தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது போல் பிரேக் பழுது காரணமாக விபத்து ஏற்படவில்லை என்பதனையும். இவ்விபத்திற்கு ஓட்டுநர் அலைபேசியில் பேசிக்கொண்டே கவனக்குறைவால் பேருந்தை இயக்கியதால்தான் இவ்விபத்து ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டு இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட ஓட்டுநர் உடனடியாக தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார் என்ற செய்தியை மறுப்பு செய்தியாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆத்தூர் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு ஓட்டுநரே காரணம் : தமிழ்நாடு போக்குவரத்து கழகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Atur ,Tamil Nadu Transport Corporation ,TMC ,SALEM ,SALEM ZONE ,ATTOOR ,Tamil Nadu Government Transport Corporation ,Salem Zone Atur ,Athur Area ,Dinakaran ,
× RELATED அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை...