×

கட்சிகளை பதிவுசெய்யும் குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி : அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் தடாலடி

சென்னை :குமாஸ்தா வேலை மட்டும்தான் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது என்று அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எடப்பாடிக்கு பின்னடைவா?. அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என கடந்த டிசம்பர் மாதம் அதிமுக சார்பில் வாதிடப்பட்டது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கொடுத்த மனுக்களையும் சேர்த்து விசாரிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சூரியமூர்த்தி கட்சிக்கு தொடர்பில்லாதவர்.

தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்பை மீறி விசாரித்ததை எதிர்த்துதான் உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற தீர்ப்புகளை தேர்தல் ஆணையம் முறைகேடாக பயன்படுத்துகிறது என வழக்கில் வாதிடப்பட்டது. அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது என வாதிட்டோம்; அதனை ஏற்று தடை விதிக்கப்பட்டது. அதிமுக வழக்கில் தேர்தல் ஆணையம் 2 தவறுகளை செய்துள்ளது; கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரணைக்கு எடுத்தது தவறு. தனது அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுவதற்கு எதிராகவே உயர்நீதிமன்றத்தை நாடினோம் .

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. இல்லாத அதிகாரத்தை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. உட்கட்சி விவகாரம் குறித்த மனுக்களை விசாரிக்கும் முன்பு ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதா என்பதை முடிவு செய்ய ஐகோர்ட் கூறியுள்ளது. கட்சிகளை பதிவுசெய்யும் குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்திற்கு 2 அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. பிரிவு 15இன் படி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டால் ஆவணங்கள் அடிப்படையில் விசாரிக்கலாம்; 29 ஏ சட்டப்பிரிவின் படி கட்சியை பதிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு; ஆனால், உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை ,”இவ்வாறு தெரிவித்தார்.

The post கட்சிகளை பதிவுசெய்யும் குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி : அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் தடாலடி appeared first on Dinakaran.

Tags : Kumasta ,Electoral Commission ,Majhi Minister ,C. V. Sanmugam Tadaladi ,Chennai ,Election Commission ,Ahimuga ,C. V. Sanmugham ,High Court ,C. V. Sanmugham Tadaladi ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...