×

பாறைகளை உடைத்து அகற்றும் பணி இரண்டாவது கட்டமாக நடக்கிறது திருவண்ணாமலை தீபமலையில்

பெஞ்சல் புயலால் உருண்டு விழுந்த
திருவண்ணாமலை, பிப்.11: திருவண்ணாமலை தீபமலையில் பெஞ்சல் புயல் மழையால் உருண்டு விழுந்து பாறைகளை உடைத்து அகற்றும் பணி இரண்டாவது கட்டமாக நடந்து வருகிறது. திருவண்ணாமலையில் பெஞ்சல் புயலால் வரலாறு காணாத கனமழை பெய்தது. அதனால், தீபம் ஏற்றும் மலையின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டன. அதனால், வஉசி நகர் பகுதியில் ஒரு வீட்டின் மீது ராட்சத பாறை உருண்டு விழுந்ததில், மண் சரிவுக்குள் சிக்கி 7 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும், அந்த பகுதியில் பல வீடுகள் சேதமடைந்தன. தொடர்ந்து அந்த பகுதியில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, பலரும் வீடுகளை காலி செய்துவிட்டு, அங்கிருந்து வேறு இடத்துக்கு வெளியேறி உள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதற்கட்டமாக 20 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கட்டித்தந்துள்ளது.

இந்நிலையில், பெஞ்சல் புயலில் தீபமலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறைகள், மீண்டும் மழை பெய்தால் தொடரந்து உருண்டு வர வாய்ப்பு உள்ளதால் அதை முற்றிலுமாக அகற்ற அமைச்சர் எ.வ.வேலு நடவடிகக்கை மேற்கொண்டார். அதன்படி, வஉசி நகர் பகுதியில் உருண்டு வந்த 40 டன் ராட்சத பாறையை, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்கனவே உடைத்த அகற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பிள்ளைக்குளம் பகுதிக்கு அருகே தீபமலையில் ஏற்பட்ட மண் சரிவில் உருண்டு வந்த பாறைகளை உடைத்து அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இப்பணியில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் மண்சரிவில் சிக்கியுள்ள பாறைகளை சிறு சிறு துண்டுகளாக உடைத்து அகற்றும் பணி நடந்து வருகிறது. அதையொட்டி, அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

The post பாறைகளை உடைத்து அகற்றும் பணி இரண்டாவது கட்டமாக நடக்கிறது திருவண்ணாமலை தீபமலையில் appeared first on Dinakaran.

Tags : Deepamalai ,Tiruvannamalai ,Cyclone ,Cyclone Penjal ,Deepam… ,
× RELATED டூவீலர் மீது கார் மோதி சிறுவன், வாலிபர் பலி