×

உச்ச, உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வேண்டும்: திமுக எம்பி தனிநபர் மசோதா தாக்கல்

சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டுவந்துள்ளார். நீதித்துறை நியமனங்களை சீர்திருத்துவதற்கும், இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது, மக்கள் தொகை மற்றும் பெண்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப, ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கும் ஒரு முக்கியமான தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பி.வில்சன் கொண்டுவந்து தாக்கல் செய்துள்ளார்.

அந்த தனிநபர் மசோதாவில், ‘உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தும்போதும் மாநில அரசுகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்புக்கு அரசியலமைப்பின் பண்புகளை வழங்கவும், கொலீஜியம் பரிந்துரைகளை அறிவிக்க மத்திய அரசுக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்.

சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் செல்லும் தன்மையை நீதிபதிகள் திறம்பட தீர்மானிப்பதால், மாநில மற்றும் நாட்டின் சமூக பன்முகத்தன்மையை நீதிமன்ற அமர்வு பிரதிபலிக்கவேண்டியது கட்டாயமாகும். இது ஒரு, ஒரே மாதிரியான சமூக வர்கத்தினருக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு கடந்த 75 ஆண்டுகளாக இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட ஒரே துறை உயர் நீதித்துறை (உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள்) மட்டுமே. உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் அமர்வு நிச்சயமாக பன்முகத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

The post உச்ச, உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வேண்டும்: திமுக எம்பி தனிநபர் மசோதா தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court and High Courts ,DMK MP ,Chennai ,Rajya Sabha ,P. Wilson ,Supreme Court and ,High Courts of India ,High Courts ,Dinakaran ,
× RELATED தொடர் விடுமுறையையொட்டி ஆழியார் அணை,...