- கடலூர்
- மாவட்ட ஆளுநர்
- சிபி ஆதித்ய செந்தில்குமார்
- துறை தொழிலாளர் முறையை ஒழிக்கும் நாள்
- கடலூர் மாவட்டம்
- தின மலர்
*மாவட்ட ஆட்சியர் பேச்சு
கடலூர் : 2030ம் ஆண்டுக்குள் கடலூர் மாவட்டத்தை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ஆண்டுதோறும் கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் வைத்தல் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவினர், கரும்பு வெட்டுதல், ஆடு மேய்த்தல், அரிசி ஆலைகள், செங்கல் சூளைகளில் கொத்தடிமை தொழிலாளர்கள் எவரேனும் பணிபுரிகிறார்களா என கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொத்தடிமை தொழிலாளர் முறை என்பது கடனுக்காக கட்டாய தொழிலாளர் ஆக்குதல், விருப்பப்பட்ட இடங்களுக்கு செல்லும் உரிமை மறுத்தல் மற்றும் விருப்பப்பட்ட வேலை செய்யும் சுதந்திரம் மறுத்தல், தான் உற்பத்தி செய்த பொருட்களை சந்தை நிலவர மதிப்பின்படி விற்பனை செய்யும் உரிமையை மறுத்தல் மற்றும் சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் பெறும் உரிமை இல்லாத கட்டாய தொழிலாளர் முறையாகும்.
மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு வருவாய் விடுவிப்பு சான்று வழங்கப்பட்டு உடனடி நிவாரணமாக ₹30,000 வழங்கப்படுகிறது. நீதிமன்றத்தில் முடிவடைந்த வழக்குகளுக்கு ₹3,00,000 வரை பாதிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்து புகார் ஏதேனும் இருந்தால் தொழிலாளர் துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மாநில கட்டணமில்லா தொலைபேசி எண் 155214.
2030ம் ஆண்டுக்குள் கடலூர் மாவட்டத்தை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் ஞானபிரகாசம், உதவி ஆணையர் ராமு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவி, அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கடலூர் மாவட்டத்தை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் appeared first on Dinakaran.
