×

என்எல்சி நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு கேட்டு தொடர் போராட்டம் நடத்த கம்மாபுரம் விவசாயிகள் முடிவு

மங்கலம்பேட்டை, பிப். 8: என்எல்சி நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு கேட்டு தொடர் போராட்டம் நடத்த கம்மாபுரம் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கங்களுக்காக கம்மாபுரம் மற்றும் அதன் அருகிலுள்ள முத்துக்கிருஷ்ணாபுரம் கோபாலபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்துவதற்காக 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போதைய காலக் கட்டங்களில் ₹6 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ₹17 லட்சம் வரை இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை, வேலைக்கு பதிலாக நிரந்தர வைப்புத் தொகை என வழங்கப்படுவதாக கூறி, தங்களுக்கும் அதேபோன்று வழங்க வேண்டும் என்று கம்மாபுரம் பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதேசமயம் இந்த நிலங்களுக்கு வாழ்வாதார தொகையாக வழங்கப்பட்ட ₹1 லட்சத்து 9 ஆயிரம் என்பது ஏற்க முடியாது என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இப்போது வழங்குவதுபோல் பாரபட்சமின்றி ₹17 லட்சம் வழங்க வேண்டும், 2000 முதல் 2013 வரை என்எல்சி நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சமமான இழப்பீடு, நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியதன் பேரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் என்எல்சி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி உரிய இழப்பீடு தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் இதுவரை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், நிலங்களை கையகப்படுத்த கம்பிவேலி அமைக்கும் பணியில் என்எல்சி நிர்வாகம் தீவிர முயற்சி செய்வதாகவும், அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகள் மற்றும் என்எல்சிக்கு வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக கம்மாபுரம் அங்காளம்மன் கோவில் வளாகத்தில், கூட்டமைப்பு தலைவர் அருளரசன் தலைமையில், கிராம முக்கியஸ்தர்கள் கோவிந்தசாமி சுதாகர், சன்னியாசி, செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2008- 09 ஆண்டுகளில் என்.எல்.சிக்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு தற்போது வழங்குவதுபோல் சமமான இழப்பீடு, நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

The post என்எல்சி நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு கேட்டு தொடர் போராட்டம் நடத்த கம்மாபுரம் விவசாயிகள் முடிவு appeared first on Dinakaran.

Tags : Kammapuram ,NLC ,Mangalampet ,Cuddalore district ,Neyveli ,NLC India Company ,Muthukrishnapuram Gopalapuram… ,Dinakaran ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு