×

சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவு காலிறுதியில் நுழைந்த தமிழக வீரர்கள்


சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று தமிழகத்தை சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன்/ விஜய் சுந்தர் இணை அபாரமாக வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஏடிபி சேலஞ்சர் டூர் ஆண்கள் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடப்பு சாம்பியன் ராம்குமார் ராமநாதன்/சகேத் மைனேனி (இந்தியா) இணையுடன், கிம்மர் கோப்பெஜன்ஸ் பெல்ஜியம்) / எர்கி கிர்கின் (துருக்கி) இணை மோதியது. நடப்பு சாம்பியனுக்கு உரிய வேகத்துடனும், விவேகத்துடனும் விளையாடிய ராம்குமார் இணை 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முதல் இணையாக முன்னேறியது.

இந்த ஆட்டம் 53 நிமிடங்களில் முடிந்தது.
தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன்/ விஜய் சுந்தர் பிரசாந்த் இணை சிறப்பு அனுமதி மூலம் வாய்ப்பு பெற்ற சிராக் துகான்/தேவ் ஜாவியா இணையுடன் மோதினர். அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜீவன்/விஜய் சுந்தர் இணை முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தியது. அடுத்து 2வது செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் சிராக்/தேவ் இணை தனதாக்கியது. அதனால் வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்யும் 3வது சுற்றில் அனல் பறந்தது. அதில் இருவரும் மாறி, மாறி புள்ளிகள் குவித்தாலும் முடிவில் ஜீவன்/விஜய் இணை அதை 13-11 என்ற கணக்கில் கைப்பற்றியது.

எனவே ஒரு மணி 24 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் ஜீவன்/விஜய் இணை வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. அதேபோல் ஜப்பானின் ஷின்தரோ மொசிசுகி/கெய்டடோ வுசூகி இணை 6-4, 6-0 என்ற நேர் செட்களில், லுகா கேஸ்டல்னுவோ(சுவிட்சர்லாந்து) / எரிக் வேனாஹெல்பெய்ம் (உக்ரைன்) இணையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியர்கள் அனைவரும் தோற்று வெளியேறிய நிலையில் இரட்டையர் பிரிவில் இந்தியர்கள் காலிறுதிக்கு முன்னேறி இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

The post சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவு காலிறுதியில் நுழைந்த தமிழக வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai Open Tennis ,Tamil Nadu ,Chennai ,Jeevan Nedunchezhiyan ,Vijay Sundar ,Chennai Open Tennis Tournament ,ATP Challenger Tour Men ,Nadu ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ்...