மன்னார்குடி: மன்னார்குடியில் ஒருவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் 4மணி நேரம் சோதனை நடத்தி செல்போன் மற்றும் பென்டிரைவை பறிமுதல் செய்தனர். அவரை சென்னை அழைத்து சென்று விசாரிக்கின்றனர். சென்னை புரசைவாக்கம் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உள்பட 5 இடங்களிலும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் உள்ளிட்ட 15 இடங்களிலும் கடந்த மாதம் 28ம்தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மீண்டும் சென்னை, திருவாரூர் உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டது தொடர்பாக மன்னார்குடி ஆசாத் தெருவில் உள்ள பாவா பக்ருதீன் (47) வீட்டுக்கு நேற்று அதிகாலை 6 மணியளவில் சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் அருண் மகேஷ் தலைமையிலான என்ஐஏ அதிகாரிகள் 4பேர் ஒரு காரில் வந்தனர்.
அவர்கள் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். 4 மணி நேரம் சோதனை நடந்தது. இதில் ஒரு செல்போன் மற்றும் பென்டிரைவ் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அடுத்த கட்ட விசாரணைக்காக பாவாபக்ருதீனை என்ஐஏ அதிகாரிகள் சென்னைக்கு அழைத்துசென்றனர்.
The post மன்னார்குடியில் என்ஐஏ சோதனை: ஒருவரை சென்னை அழைத்து சென்று விசாரணை appeared first on Dinakaran.
