×

சென்னை ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் இத்தாலி வீரர் வெற்றி: இந்திய வீரர்கள் இன்று மோதல்

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று இத்தாலி வீரர் ஜேகப் பெர்ரெட்டினி வெற்றி பெற்றார்.  சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டூர் ஆண்கள் டென்னிஸ் சென்னையில் நேற்று தொடங்கியது. முதன்மை சுற்றின் முதல் சுற்று ஆட்டங்களும், நேற்று முன்தினம் தொடங்கிய தகுதிச் சுற்று ஆட்டங்களும் நேற்று நடந்தன. முதல் ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜேகப் பெர்ரெட்டினி (26வயது, 324வது ரேங்க்), ஜப்பான் வீரர் ஷோ ஷிமாபுகுரோ (27வயது, 193வது ரேங்க்) மோதினர்.

ஜேகப் தரவரிசையில் பின்தங்கியிருந்தலும் வேகத்தில் முந்தியிருந்ததால் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். ஆனால் 2வது செட்டில் வெற்றிக்காக இருவரும் கடுமையாக போராடினர். அதனால் இருவரும் 6-6 என்ற புள்ளிக் கணக்கில் சமபலத்தில் இருந்ததால் ஆட்டம் டை பிரேக்கர் வரை நீண்டது. கூடுதல் வேகம் காட்டிய ஜேகப் 7-6 (7-4) என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார்.

அதனால் ஒரு மணி 43 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் ஜேகப் 2-0 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு முதல் சுற்று ஆட்டத்திலும் ஜப்பான், இத்தாலி வீரர்களே விளையாடினர். அதில் ஜப்பான் வீரர் ஷின்தரோ மோசிசுகி (21வயது, 181வது ரேங்க்) 6-2, 6-1 என நேர் செட்களில் இத்தாலி வீரர் என்ரிகோ டல்லாவை (26வயது, 279வது ரேங்க்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்த ஆட்டம் ஒரு மணி 27 நிமிடங்களில் முடிந்தது. இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன், முகுந்த் சசிகுமார், கரண் சிங் ஆகியோர் முதல் சுற்று ஆட்டங்களில் இன்று களம் காண உள்ளனர். இவர்கள் மூவரும் ஒற்றையர் பிரிவில் சிறப்பு அனுமதி மூலம் வாய்ப்பு பெற்றுள்ளனர். இரட்டையர் பிரிவில் ராம்குமார் நடப்பு சாம்பியன் என்பதால் வாய்ப்பு தானாகவே அமைந்தது.

The post சென்னை ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் இத்தாலி வீரர் வெற்றி: இந்திய வீரர்கள் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Italy ,Chennai Open ,Chennai ,Jacob Berrettini ,Chennai Open tennis ,Chennai Open ATP Challenger Tour Men's ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ்...