×

இசிஆர் சாலையில் பெண்களை வழிமறித்து மிரட்டியவர்கள் அதிமுகவினரே: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் எந்த ஒரு குற்றச் சம்பவம் நடைபெற்றாலும் அதைத் திமுகவோடு தொடர்புபடுத்த வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடு எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முயன்றுவருகிறார். இசிஆர் சாலையில் பெண்கள் பயணித்த காரை சிலர் வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு அதிமுகவை சார்ந்தவர். கைது செய்யபட்டவர் பயணித்த கார் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளருடைய சகோதரர் மகனுக்குச் சொந்தமானது.

அண்ணாநகர் சிறுமி வழக்கில் கைது செய்யப்பட்டவர் அதிமுகவை சார்ந்த வட்டசெயலாளர் சுதாகர். திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிமுகவை சார்ந்தவர். ராமேஸ்வரத்தில் பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா வைத்தவர் அதிமுக பிரமுகர். படப்பை பகுதியைச் சார்ந்த குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பொன்னம்பலம் வீட்டில் வடைக்கு இருந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் விருதுநகர் நரிக்குடி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சந்திரன் தலைமையிலான கும்பல் ஆயுதங்களுடன் சென்று, கே.சி.பிரபாத் என்பவரையும், அவரது குடும்பத்தினரையும் வீடு புகுந்து தாக்கி, ரவுடித்தனம் செய்தனர். கடந்த மாதம் நெல்லை, ராதாபுரத்தில் சிபு ஆண்டனி என்ற ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி, அவருக்கு சொந்தமான 60 சென்ட் நிலத்தை எழுதி வாங்கி அபகரிக்க முயன்ற முடவன்குளத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சுப்பிரமணி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற பெண் இன்ஸ்பெக்டரை ஹெல்மெட்டால் அடித்து கொலை செய்த வழக்கில் அதிமுக பிரமுகர் பிரபு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் சென்னை தியாகராய நகர் கண்ணம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் திருமுருகன், சிஏ படிக்கும் மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், முகத்தில் ஆசிட் வீசி கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி இன்னும் எத்தனையோ குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளோர் எல்லாம் அதிமுகவினரே.

ஆனால் அதை எல்லாம் மறைத்து, மக்களை திசை திருப்பும் நோக்கில் வேண்டுமென்றே திமுக மீது அவதூறு பரப்பி வருகிறார் பழனிசாமி. அதிமுகவினர் செய்யும் தவறுகள் அனைத்தையும் திமுகவினர் மீது பழிபோட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்கள் போற்றும் நல்லாட்சி நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக திமுக எல்லா தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றது. மக்களிடம் திமுக அரசாங்கம் பெற்றுள்ள நற்பெயரைக் குலைப்பதற்கு, திட்டமிட்ட வகையில் அதிமுக முயற்சி செய்து வருகின்றது என்பதையே இசிஆர் சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரம் காட்டுகின்றது. ஆகவே, இந்த விவகாரத்தில் முழுமையான புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு, குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்று காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.

The post இசிஆர் சாலையில் பெண்களை வழிமறித்து மிரட்டியவர்கள் அதிமுகவினரே: ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : R. S. ,Bharati ,Chennai ,Anna ,M. K. ,Edappadi Palanichami ,Tamil Nadu ,Thimughav ,ECR ,R. S. Bharati ,
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்