×

ஆண்டாள் அருளிய அமுதம்

பிராட்டியார் சங்கைப்பற்றி பாடினாலும் கூட, சக்கரத்தை தனியாக பிரிப்பதில் மனமில்லையோ என்னவோ தெரியவில்லை. சொல் ஆழி வெண் சங்கே என்கிறாள். இங்கு ஆழி என்பதற்கு சக்கரம் என்று வேறு அர்த்தமும் உண்டு. சங்காழ்வான் எப்போதுமே சேர்ந்தேதான் இருப்பான். இரண்டு பேரையும் பிரிப்பதில் மனசில்லாமல், சொல் ஆழி வெண் சங்கே… என்று சக்கரத்தையும் சேர்த்தே பாடியிருக்கிறாளோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதிலேயும் இன்னொரு சூட்சுமம் பார்த்தோமெனில், எந்தவொரு பந்தமானது பகவான் ஏற்படுத்தி வைத்த பந்தமோ அது சத்சங்க பந்தம். அந்த சத்சங்க பந்தம் என்றைக்கும் பிரியாது பிரிக்க முடியாது. அப்படித்தான் இந்த சங்கிற்கும் சக்கரத்திற்குமான பந்தத்தை பகவான் ஏற்படுத்தியிருக்கிறார். சங்கும் சக்கரத்திற்கும் இருக்கக் கூடிய பந்தம் என்பது சத்சங்க பந்தம். இந்த சத்சங்க பந்தத்தை பிரிக்கக் கூடாது. பிரிய முடியாது என்று காண்பிப்பதற்காகத்தான் என்னவோ… சொல் ஆழி வெண் சங்கே என்று சக்கரத்தையும் ஞாபகப்படுத்துகிறாள்.

சக்கரமானது பிந்து சொரூபம். சங்கானது நாத சொரூபம். இந்த இரண்டையும் நாத பிந்து சொரூபமாக பகவான் கையில் வைத்திருக்கிறான் என்பது தத்துவார்த்தம். சங்கு கையில் இருந்து கொண்டே வேலை செய்யும். சக்கரம் கையை விட்டு வெளியே போய் வேலை செய்யும். சங்கு யாரையும் போய் சம்ஹாரம் செய்வதில்லை. சங்கு தன்னுடைய ஓசையின் மூலமாகவே துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்யும். சக்கரம் நேரடியாகச் சென்று துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்யும். அப்போது சங்கு செய்யக் கூடிய வேலை முற்றிலும் வேறுபட்டது. சக்கரம் செய்யக் கூடிய வேலை முற்றிலும் வேறுபட்டது. ஆனால், பகவான் இதை இரண்டையும் இணைக்கிறான். ஒரு பக்தனுடைய உணர்வு அனுபவமெல்லாம் வேறுபட்டதாக இருக்கலாம். இன்னொரு பக்தருடைய அனுபவம் உணர்வு வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால், பக்தர்களை பகவான் தன் மூலமாக தன்னை முன்னிட்டுக் கொண்டு அடியார்களை பகவான் இணைத்து வைப்பான். அந்த இணைத்து வைப்பதற்குத்தான் சத்சங்கம் என்று பெயர். ஆழி வெண் சங்கு என்று சொல்லும்போதே நமக்கு ஆண்டாள் சத்சங்கத்தையும் காண்பித்துக் கொடுக்கிறாள்.

சங்கிற்கும் சக்கரத்திற்கும் எப்படிச் சொல்கிறோமோ… அதேபோல ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் சொல்லலாம். ஆதிசேஷன் நாகராஜா. நாகங்களின் தலைவன். கருடக் கூட்டத்திற்கு தலைவன் கருடன். இவர்கள் இருவருமே சகோதரர்கள். கருடன் வினதா சுதன். ஆதிசேஷன் கத்ரு சுதன். இது புராணத்தில் வருகின்றது. இவர்கள் இருவருக்கும் நடந்த சண்டை என்ன? போன்றவை புராண விஷயங்கள். ஆனால், பொதுவாக கருடனுக்கும் பாம்புக்கும் ஆகாது. கருடனும் பாம்பும் எந்த இடத்தில் சேர்ந்திருக்கிறதெனில் பகவானிடத்தில் சேர்ந்திருக்கிறது. ஏன் பகவானிடம் சேர்ந்திருக்கிறதெனில், அவனுடைய தனிப்பட்ட குணம் எப்படியிருந்தாலும், கருடன் அங்கே பக்தன். தனிப்பட்ட குணம் எப்படியிருந்தாலும் ஆதிசேஷன் அங்கு பக்தன். இப்படி தனிப்பட்ட குணங்களை முற்றிலுமாக எடுத்துவிட்டு, அழித்துவிட்டு முழுமையாக பக்தி என்கிற விஷயத்தை கொடுத்து பக்தர்களை சத்சங்கத்தில் இணைத்து வைக்கக்கூடிய பெரிய விஷயத்தை பகவான் இங்கு செய்கிறார்.

எப்படி கருடனையும் ஆதிசேஷனையும் இணைத்து வைக்கிறாரோ… அப்படித்தான் சங்கையும் சக்கரத்தையும் இணைத்து வைக்கிறார். கருடனையும் ஆதிசேஷனையும் இணைத்து வைத்ததற்கு ஒரு க்ஷேத்ரமே இருக்கிறது. அந்த க்ஷேத்ரத்திற்குப் பெயர் திருவெள்ளறை என்பதாகும். இந்த க்ஷேத்ரத்திற்குள் புண்டரீகாக்ஷ பெருமாள் சந்நதியில் பார்த்தோமானால் பெருமாளின் இரண்டு பக்கமும் கருடனும் ஆதிசேஷனும் மூலஸ்தானத்திலேயே
எழுந்தருளியிருப்பார்கள்.

ஏனெனில், இரண்டு பேரும் பெருமாளை நோக்கி தவமியற்றுகிறார்கள். ஆதிசேஷன் தவம் செய்து படுக்கையாகிறான். கருடன் தவம் செய்து வாகனமாகின்றான். இரண்டு பேரையும் தன் அருகே வைத்துக் கொண்டு திருவெள்ளறையில் புண்டரீகாக்ஷனாக இருக்கிறான்.

இப்படி பகவானால் சேரக்கூடிய பந்தம் என்பது சத்சங்க பந்தம். அந்த சத்சங்க பந்தத்தை காண்பித்து கொடுப்பதற்காக இந்த பாசுரத்தின் கடைசி வரியில் ஆழி வெண் சங்கே… என்று சொல்லி கடலிலிருந்து உதித்த வெண் சங்கே என்று ஒரு அர்த்தம் இருந்தால்கூட, ஆழி வெண் சங்கே என்று சங்காழ்வானையும் சக்கரத்தாழ்வாரையும் சேர்த்தே இந்த இடத்தில் பாடி பாசுரத்தை நிறைவு செய்கிறாள்.

இந்தப் பாசுரத்தின் விஷயமென்ன என்றால், கற்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ… என்பதில் அந்த மணத்தைச் சொல்லி, பிறகு சுவையைச் சொல்லி அந்த சுவையும் மணமும் நமக்கு எதைக் காண்பித்துக் கொடுக்கின்றது என்பதைக் காண்பித்துக் கொடுத்து அதை பிரணவ நாதத்தை எழுப்பக் கூடிய சங்காழ்வான் மூலமாக காண்பித்துக் கொடுத்து, அந்த சங்காழ்வான் மூலமாக அந்த சத்சங்கத்தையும் காண்பித்துக் கொடுத்து அதற்கு அடுத்து மருப்பொசித்த மாதவன் என்று சொல்லும்போது, குவலயா பீடம் மாதிரி இருக்கக் கூடிய நம்முடைய அஞ்ஞான வாசனையை எப்படி நீக்கி நமக்குள் ஞானத்தை கொடுக்கிறான் என்று காண்பித்துக் கொடுத்து, கடைசி வரியில் ஆழி வெண் சங்கே என்பதில் சங்காழ்வான் சக்கரத்தாழ்வான் போல சேர்ந்தே இருக்கும் சத்சங்கத்தையும் காண்பித்துக் கொடுத்து அழகாக நிறைவு செய்கிறாள்.

நாமும் இந்த பாசுரத்தை மீண்டும் மீண்டும் பாராயணம் செய்து இதில் சொல்லப்பட்ட உபதேசங்களை உள்வாங்கி ஆண்டாள் திருவடியை நமஸ்கரித்து உய்வோமாக!

The post ஆண்டாள் அருளிய அமுதம் appeared first on Dinakaran.

Tags : Andala ,Pratiar ,Sangha ,Alahi Ven Sange ,
× RELATED திருவாலம் பொழில், ஆத்மநாதேஸ்வரர்