×

பேரணாம்பட்டில் ஹவாலா பணம் ₹100 கோடி வங்கி கணக்கில் பரிமாறப்பட்டதாக கூறி கூலி தொழிலாளியிடம் ₹69 ஆயிரம் மோசடி

*சைபர் கிரைம் போலீசார் போல் நடித்து துணிகரம்

பேரணாம்பட்டு : வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு காயிதே மில்லத் நகரில் வசிப்பவர் ஜாவித்(26), கூலி தொழிலாளி. கடந்த 24ம் தேதி இவரது போன் நம்பருக்கு சைபர் கிரைம் போலீசார் பேசுகிறோம் என்று உருது மொழியில் பேசியுள்ளனர். அப்போது உங்களுடைய வங்கி கணக்கில் வெளி நாட்டில் இருந்து 10 கோடி ரூபாய் ஹவாலா பணம் சட்டத்துக்கு விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கான ஆதாரங்கள் உங்கள் வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பி வைத்துள்ளோம். உங்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளோம் என்று கூறி மிரட்டி உள்ளனர்.

இந்த வழக்கில் இருந்து உங்களை விடுவிக்க வேண்டும் என்றால் 1 லட்சம் ரூபாய் பணம் கொடு என்று கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜாவித், அவர்கள் அனுப்பிய வாட்ஸ் அப் டிபியில் காக்கி சட்டை அணிந்து ஏதோ ஒரு உயர் அதிகாரியின் படமும், அதில் சைபர் கிரைம் போலீஸ் என்று இருந்தது.அதனை கண்டு ஜாவித் உண்மை என்று நம்பியுள்ளார்.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை. தற்போது 10 ஆயிரம் தான் உள்ளது என்று கூறி உள்ளார். அதனை கேட்ட அவர்கள் சரி முதலில் அதனை நாங்கள் கொடுக்கும் ஜீபே நம்பருக்கு அனுப்பி வை என்று 10 ஆயிரத்தை பெற்றுள்ளனர்.

பின்பு, ஐந்து நாட்களுக்குள் மீதி பணத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி தினமும் போன் செய்து டார்ச்சர் செய்து அவரிடம் இருந்து 17000, 25000, 10000, 8000 என 69 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஜாவிதை மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக 10 ஆயிரம் பணம் அனுப்பி வை இல்லை என்றால் உன்னையும் உங்கள் வீட்டில் இருப்பவர்களையும் கைது செய்ய வந்து விடுவோம் என்று கூறி உள்ளனர்.

இதனால் பயந்து போன ஜாவித் இதுகுறித்து யாரிடமும் கூறாமல் இருந்து உள்ளார். அதே பகுதியை சேர்ந்த தனது நன்பர் பயாஸ் என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வேண்டும் என்று கேட்டு உள்ளார். அவருடைய நண்பர் ஏன் எதற்கு என்று கேட்டு விசாரணை செய்ததில், ஜாவித் நடந்த அனைத்தையும் தனது நண்பரிடம் கூறி உள்ளார்.

தொடர்ந்து அவரது நண்பர் ஜாவிதை அழைத்துக்கொண்டு பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் நடந்ததை கூறி புகார் மனு கொடுத்துள்ளார். மேலும், தமிழ்நாடு சைபர் கிரைம் 1930 என்ற எண்ணிற்கும் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பேரணாம்பட்டில் ஹவாலா பணம் ₹100 கோடி வங்கி கணக்கில் பரிமாறப்பட்டதாக கூறி கூலி தொழிலாளியிடம் ₹69 ஆயிரம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Raanampet ,Jawid ,Gayite Millat, Vellore District, Vellore District ,Dinakaran ,
× RELATED தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு – மூவர் கைது