காலே: இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 654 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை 44 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது.
ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நேற்று முன்தினம் துவங்கிய முதல் டெஸ்டில் சதமடித்த உஸ்மான் கவாஜா தொடர்ந்து சிறப்பாக விளையாடி, டெஸ்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
பேட் கம்மின்ஸ்க்கு பதிலாக கேப்டன் பதவியே ஏற்ற ஸ்டீவன் ஸ்மித் தன் பங்குக்கு சதமடித்தார். கவாஜா – ஸ்மித் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 141 ரன்களில் ஸ்மித் அவுட் ஆனார். மறுமுனையில் 4வது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த ஜாஸ் இங்லிஸ் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். கவாஜா 232, இங்லிஸ் 94 பந்துகளில் 102 ரன்களில் ஆட்டமிழந்தார். பியூ வெப்ஸ்டர் 23 ரன்னில் அவுட் ஆனார். 154 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 654 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அலெக்ஸ் கேரி 46, ஸ்டார்க் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெப்ரி வான்டர்சாய் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க ஜோடியான ஒசாடா பெர்னாண்டோ – திமுத் கருணரத்னே மற்றும் முன்னாள் கேப்டன் மாத்யூஸ் தலா 7 ரன்களில் அவுட் ஆயினர். 2ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்களை எடுத்திருந்தது. சண்டிமல் 9, கமிந்து மெண்டிஸ் 13 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆஸி. தரப்பில் மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குனமென், நாதன் லியோன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
The post முதல் இன்னிங்சில் இலங்கை சொதப்பல் 654/6 ஆஸ்திரேலிய ரன் மழை: கவாஜா 232, ஸ்மித் 141, இங்லிஸ் 102 appeared first on Dinakaran.
