×

சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடைத்து வைக்க குவாண்டனாமோ விரிகுடாவில் தடுப்பு மையம் விரிவாக்கம்: உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்

வாஷிங்டன்: கியூபாவின் குவாண்டனாமோ வளைகுடாவில் கடற்படை நிலையத்தில் இருக்கும் தடுப்பு காவல் மையமானது இதுவரை தீவிரவாதிகளை அடைத்து வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த தடுப்பு காவல் மையத்தை விரிவாக்கம் செய்வதற்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்காக நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் கையெழுத்திட்டுள்ளார். இந்த தடுப்பு காவல் மையத்தினை சுமார் 30000 பேர் தங்குவதற்கு ஏதுவான வசதிகள் கொண்டதாக மாற்றும்படி அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அதிபர் டிரம்ப், ‘‘குவாண்டனாமோ தடுப்பு மையத்தில் அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் மோசமான குற்றப்பதிவுகளை கொண்ட, சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தங்கவைக்கப்படுவார்கள். அவர்களில் சிலர் மிகவும் மோசமானவர்கள். அவர்களின் சொந்த நாடுகள் அவர்களை தடுத்து வைக்கும் என்று நாங்கள் நம்பவில்லை. அவர்கள் திரும்பி வருவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே தான் அவர்களை குவாண்டனாமோவிற்கு அனுப்பப் போகிறோம்” என்றார். மேலும் அதிபர் டிரம்ப்பின் கடன்கள் மற்றும் மானியங்களுக்கான செலவினங்களை நிறுத்தி வைக்கும் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது அரசு நிதியை நம்பி இருக்கும் மாகாணங்கள், பள்ளிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. நிதியுதவியை நிறுத்தும் அதிபர் டிரம்பின் உத்தரவு அமலுக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மாகாண நீதிபதி அதிபர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

* ஹமாஸ் ஆதரவு மாணவர்கள் விசா ரத்து
அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்த திட்டத்தில், கல்லூரி வளாகங்களில் யூத எதிர்ப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுக்கிறது. குற்றவாளிகள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று கண்டறியப்பட்ட சர்வதேச மாணவர்களுக்கான விசா ரத்து செய்யவும் வழிவகை செய்கின்றது. இதேபோல் மற்றொரு திட்டமானது கேஜி முதல் 12 வரையிலான பள்ளிகள் தீவிர பாலின சித்தாந்தம் மற்றும் இனக் கோட்பாடு உட்பட குழந்தைகளின் புத்திசாலித்தனத்திற்கு கூட்டாட்சி பணத்தை பயன்படுத்த முடியாது என்று குறிப்பிடுகின்றது. தனது தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக இந்த நடவடிக்கைகளை அதிபர் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் இந்த முன்மொழிவுகளை செயல்படுத்துவதற்கு அதிபருக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்பது தெரியவில்லை.

* ஹமாஸ் ஆணுறை வாங்க அமெரிக்க நிதியா?
காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் ஆணுறை வாங்குவதற்காக முன்னாள் அதிபர் பைடன் நிர்வாகம் ஒதுக்கிய 50 மில்லியன் டாலர் நிதி நிறுத்தி வைக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதேபோல் செவ்வாயன்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர் சந்திப்பின்போது, அரசின் செயல்திறன் துறை மற்றும் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகம் காசாவில் ஆணுறைகளுக்கு நிதியளிப்பதற்காக 50 மில்லியன் டாலரை செலவழிக்கப்பட்டது கண்டறியப்பட்டு நிறுத்தப்பட்டது. இது வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்கும் நடவடிக்கையாகும்” என்று கூறினார். அமெரிக்கா நிதியை பயன்படுத்தி ஹமாஸ் ஆணுறை வாங்கியதாக டிரம்ப கூறியதற்கு நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. காசாவில் மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக சர்வதேச மருத்துவ படை என்ற குழுவிற்கு வழங்கிய மானியத்தை அதிபர் மற்றும் செய்தி தொடர்பாளர் குறிப்பிடுவதாக தெரிகிறது.

The post சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடைத்து வைக்க குவாண்டனாமோ விரிகுடாவில் தடுப்பு மையம் விரிவாக்கம்: உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப் appeared first on Dinakaran.

Tags : Trump ,Guantanamo Bay ,Washington ,Naval Station ,Guantanamo Bay, Cuba ,President ,Guantanamo Bay detention center ,Dinakaran ,
× RELATED மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்..!!