×

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள்!

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பாக நடத்தப்படும் சிறப்பு முகாம்களில், வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்கள் விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்களை ஒப்படைத்து பட்டா பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், 1961-ம் ஆண்டில் இருந்து பொது மக்களின் நலன் கருதி மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி ஒதுக்கீடு செய்து வருகிறது. அவ்வாறு ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் முழுத் தொகையையும் செலுத்திய பிறகு நடைமுறையில் உள்ள வாரிய விதிமுறைகளின்படி விற்பனை பத்திரம் வழங்கி வருகிறது. விற்பனை பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு தமிழக அரசின் மேலான உத்தரவிற்கு இணங்க முதற்கட்டமாக சென்னை மாவட்டத்தில் வருவாய் துறையிடமிருந்து நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு ஏதுவாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில் வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டா பெற வருவாய் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இச்சிறப்பு முகாம்களில் ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெற ஏதுவாக துண்டு சீட்டு பிரசுரம் செய்தல், வீடு வீடாக சென்று வசிப்பவர்களிடம் உரிய ஆவணங்கள் சேகரித்தல் மற்றும் அனைத்து ஒதுக்கீடுதாரர்களுக்கும் கடிதங்கள் அனுப்பி பட்டா பெற்று கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்கள் இச்சிறப்பு முன் முயற்சியை பயன்படுத்தி தாங்கள் வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வாங்கிய சொத்திற்கு நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு ஏதுவாக விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பாக நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் ஒப்படைத்து பட்டா பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த அரிய வாய்ப்பின் மூலம் பயன் பெறுமாறு ஒதுக்கீடுதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Housing Board ,Chennai ,Tamil Nadu Housing Authority ,Housing Facility Board ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசல் வழக்கு: 19ம் தேதி விஜயிடம் மீண்டும் விசாரணை?