×

பணி பாதுகாப்பு வழங்கக்கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

திருவாரூர், ஜன.30: பணி பாதுகாப்பு வழங்கக்கோரி திருவாரூரில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் நேற்றும் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றம் மற்றும் யுஜிசி நிர்ணயம் செய்தவாறு ரூ.50 ஆயிரம் மாத ஊதியத்தினை வழங்கவேண்டும், பணியில் இருக்கும் அனைத்து கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பணி பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும், கவுரவ விரிவுரையாளர்களுக்கான அரசாணை எண் 56 யை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கவேண்டும், மாற்றுத்திறனாளி கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசாணை எண் 151 யை நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் கடந்த 24ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திருவாரூரில் இயங்கி வரும் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியிலும் 103 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நேற்றும் 5வது நாளாக கல்லூரி முன்பாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் குமரன் தலைமையிலும், செயலாளர் ரவி, பொருளாளர் ராஜேஷ் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொறுப்பாளர்கள் விஜய், அருமை தாஸ், சரவணன், மாரிமுத்து உட்பட கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பணி பாதுகாப்பு வழங்கக்கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Government College ,Thiruvarur ,Association of Lecturers of the Government College of Governors ,UGC ,Government College Honorary Lecturers ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை