×

நள்ளிரவு வீடு புகுந்து கும்பல் வெறிச்செயல் ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக்கொலை

*கீழ்பென்னாத்தூர் அருகே பயங்கரம்

கீழ்பென்னாத்தூர் : கீழ்பென்னாத்தூர் அருகே நள்ளிரவு வீடு புகுந்து, ரியல் எஸ்டேட் அதிபரை சரமாரி வெட்டிக்கொன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் மதுரா சாலையூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், விவசாயி. இவர் ஏரி அருகே உள்ள தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார்.

இவரது மகன் கார்த்திகேயன்(33). ரியல் எஸ்டேட் தொழிலதிபரான கார்த்திகேயன், சிறுநாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே இ-சேவை மையமும் நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் கார்த்திகேயன் நேற்றுமுன்தினம் இரவு இ-சேவை மையத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்தார். வழக்கம்போல் இரவில் முன்பக்க கதவுக்கு பின்னால் படுத்து தூங்கினார். அவரது பெற்றோர், தனித்தனி இடங்களில் படுத்து தூங்கினர். கார்த்திகேயனின் தாத்தா கோபால்(90) என்பவர் கார்த்திகேயனின் அருகே படுத்திருந்தார். கதவுக்கு அருகிலேயே படுத்திருந்ததால், தாழ்பாள் போடாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்துள்ளது. அவர்கள், கார்த்திகேயனை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும் பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கார்த்திகேயன் முயன்றும் முடியவில்லை. அதற்குள் மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையில் சத்தம் கேட்டு எழுந்த தாத்தா கோபாலை, மர்ம கும்பல் கீழே தள்ளியுள்ளது. இதில் நிலை தடுமாறி விழுந்த அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மர்ம கும்பல் தப்பியோடிவிட்டது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு எழுந்து ஓடிவந்த பெற்றோர், மகன் சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வந்தவாசி டிஎஸ்பி ராஜாங்கம், கீழ்பென்னாத்தூர் இன்ஸ்பெக்டர் லட்சுமி, எஸ்ஐக்கள் அம்பிகா, பாண்டுரங்கன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் வந்து அங்கு பதிவாகியிருந்த கொலையாளிகளின் ரேகைகைளை பதிவு செய்தனர்.

மேலும் திருவண்ணாமலையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடியது. யாரையும் பிடிக்கவில்லை. பின்னர் கார்த்திகேயனின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? ஏதேனும் முன்விரோதம் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் ஏதேனும் சிசிடிவி கேமரா உள்ளதா எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post நள்ளிரவு வீடு புகுந்து கும்பல் வெறிச்செயல் ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Tags : Saramari ,Kalbennatur ,Ramakrishnan ,Surunathur Mathura Road ,Tiruvannamalai district ,Pennattur ,Midnight House Gang Madness ,
× RELATED வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவி அடித்துக்கொலை காதல் கணவனுக்கு வலை