×

தை அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்!!

திருச்சி: தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் ஏராளமான மக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாள்கள் மிகவும் விசேஷமானது. தை அமாவாசை இந்து சமய மக்களின் புனிதமும் சிறப்பும் மிகுந்த தினமாகும். தை மாதத்தில் வரும் இந்த அமாவாசை தினத்தன்று தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மறைந்த மூதாதையரை நினைத்து விரதம் கடைபிடிப்பர். ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிக்க இயலாதவர்கள், தை அமாவாசையன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு வழிபாடு செய்வர்.

அப்படி தை அமாவாசை தினமான இன்று திருச்சி அம்மா மண்டபம் படித்துறை அருகே காவிரி ஆற்றில் நீராடி பின்னர் தங்களது மூதாதையர்களுக்கு திதி கொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்து வருகின்றனர். இதில், திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து காவிரி தாயாரையும் பின்னர் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட ஆலயங்களுக்குச் சென்றும் வழிபாடு செய்தனர். திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

The post தை அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்!! appeared first on Dinakaran.

Tags : Amavasya ,Srirangam ,Amma Mandapam ,Thai Amavasya ,Srirangam Amma Mandapam ,Cauvery River ,Aadi ,Purattasi ,Thai ,Hindus… ,
× RELATED மெட்ரோ ரயில் திட்டம்: மேலகிரி என...