×

ஜூனியர் உலகக் கோப்பை டி20: ஸ்காட்லாந்துடன் கடைசி போட்டி இந்திய மகளிர் வெற்றிக்கொடி; 31ம் தேதி அரையிறுதியில் இங்கி.யுடன்

கோலாலம்பூர்: ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை டி20 போட்டியில் நேற்று, ஸ்காட்லாந்து அணியை இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மலேசியாவில் நேற்று நடந்த கடைசி சூப்பர் 6 டி20 போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக இந்திய மகளிர் களமிறங்கினர். துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய கொங்காடி திரிஷாவும், தமிழகத்தின் கமாலினியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சேர்ந்து சிக்சர், பவுண்டரிகளாக பறக்க விட்டதால் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 13.3 ஓவரில் அணியின் ஸ்கோர் 147 ஆக இருந்தபோது கமாலினி 42 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 51 ரன் எடுத்து அவுட்டானார். பின் வந்த சனிகா சால்கேவும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.

இதனால், 20 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை இந்தியா குவித்தது. கொங்காடி திரிஷா 59 பந்துகளில் 4 சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 110 ரன் குவித்து களத்தில் இருந்தார். சனிகா 29 ரன் எடுத்தார். அதைத் தொடர்ந்து, 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஸ்காாட்லாந்து வீராங்கனைகள் வருவதும் போவதுமாக இருந்தனர். 14 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஸ்காட்லாந்து 58 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், 150 ரன் வித்தியாசத்தில் இந்தியா மெகா வெற்றி பெற்றது. ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை டி20 வரலாற்றில் முதல் முறையாக சதம் விளாசிய திரிஷா ஆட்ட நாயகி.

* துவங்குது கிரிக்கெட் யுத்தம் வெற்றிக்கு இந்தியா ஆயத்தம்
மலேசியாவில் நடந்து வரும் 19 வயதுக்கு உட்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கும் 2வது ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை டி20 போட்டிகளில் 16 அணிகள் மோதின. இந்த அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு நடந்த லீக் சுற்று போட்டிகளின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. இந்த 12 அணிகள் குரூப் 1, குரூப் 2 என இரு சூப்பர் சிக்ஸ் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த குரூப்புகளில் இடம் பெற்ற அணிகள் இடையே நடந்த போட்டிகளின் முடிவில் இரு குரூப்புகளிலும் முதல் இரு இடங்களை பிடித்துள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

வரும் 31ம் தேதி கோலாலம்பூரில் பயுமாஸ் ஓவல் மைதானத்தில் நடக்கும் முதல் அரை இறுதியில் இங்கிலாந்து அணியுடன் இந்தியா மோதும். இந்த தொடரில் ஆடிய அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக இங்கிலாந்துடனான அரையிறுதியிலும் வெற்றிப் பயணத்தை தொடர இந்தியா ஆயத்தமாகி வருகிறது. இந்த போட்டிக்கு பின் நடக்கும் 2வது அரை இறுதியில் தென் ஆப்ரிக்கா அணியுடன் ஆஸ்திரேலியா மகளிர் அணி மோதும்.
முன்னதாக, இன்று நடக்கும் சூப்பர் சிக்ஸ் முதல் போட்டியில் நைஜீரியா – அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா – இலங்கை மகளிர் அணிகள் மோதவுள்ளன.

The post ஜூனியர் உலகக் கோப்பை டி20: ஸ்காட்லாந்துடன் கடைசி போட்டி இந்திய மகளிர் வெற்றிக்கொடி; 31ம் தேதி அரையிறுதியில் இங்கி.யுடன் appeared first on Dinakaran.

Tags : Junior World Cup T20 ,women's ,Scotland ,England ,Kuala Lumpur ,India ,Junior Women's World Cup T20 ,women ,Super 6 T20 ,Malaysia ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது...