×

வாகனங்களை ஓட்டும் போது போட்டி, பொறாமையை டிரைவர்கள் கைவிட வேண்டும்: எஸ்.பி. ஸ்டாலின் வேண்டுகோள்

நாகர்கோவில், ஜன.29: பஸ்கள் ஓட்டும் போது டிரைவர்கள் போட்டி, பொறாமையை கைவிட வேண்டும் என்று எஸ்.பி. ஸ்டாலின் கூறினார். நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் நேற்று, அரசு பஸ் டிரைவர்களுக்கான விபத்து தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி தலைமை வகித்தார். துணை மேலாளர் ஜெரோலின், முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் எஸ்.பி. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது : நாட்டில் அதிக மக்கள் விரும்புவது பஸ் போக்குவரத்தை தான். அரசு பஸ்களை நம்பி தான் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை பயணமே உள்ளது. எனவே அரசு பஸ் டிரைவர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும். ஒரு சில விபத்துக்களுக்கு டிரைவர்களுக்கு இடையே எழும் ஈகோ பிரச்னை தான் முக்கிய காரணமாக உள்ளது. எனவே வாகனம் ஓட்டும் போது போட்டி, பொறாமை கொள்ள கூடாது. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் 29 நாட்கள் சஸ்பென்ட் என்று அரசு உத்தரவு உள்ளது. எனவே செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் சீருடை மிகவும் மதிப்புக்குரியது. சீருடையுடன் நீங்கள் செல்போன் பேசிக் கொண்டு அரசு பஸ்சை இயக்குவது போல் வீடியோக்கள் வருவது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும். எனவே செல்போன் பேசிக் கொண்டு, பஸ்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும். பஸ் நிறுத்தம் உள்ள பகுதியில் சில டிரைவர்கள் நடு ரோட்டில் பஸ்சை நிறுத்துகிறார்கள். அவ்வாறு இல்லாமல், இடதுபுறம் ஒதுக்கி பஸ்சை நிறுத்த வேண்டும். விபத்தில்லா மாவட்டமாக குமரி மாவட்டம் அமைய ஒத்துழைக்க வேண்டும் என்றார். வட்டார போக்குவரத்து அலுவலர் சசி மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post வாகனங்களை ஓட்டும் போது போட்டி, பொறாமையை டிரைவர்கள் கைவிட வேண்டும்: எஸ்.பி. ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : S.P. Stalin ,Nagercoil ,Nagercoil State Transport Corporation ,Chief General Manager ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை