×

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க கைதிகளின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொகையில் முறைகேடு? நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வேலூர் சிறையில் தண்டணை கைதியாக உள்ள தனது கணவருக்கு முதல் வகுப்பு ஒதுக்கக் கோரி, கடலூரைச் சேர்ந்த தீபா லக்‌ஷ்மி ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். அந்த மனுவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்காக சிறையில் பணிபுரியும் கைதிகளின் ஊதியத்தில் இருந்து 20% பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இம்மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், கணக்குகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகிறது. இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கூறினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலைமை தணிக்கை அதிகாரி ஒரு குழுவை அமைத்து தமிழகம் முழுவதும் உள்ள எட்டு மத்திய சிறைகளில் தணிக்கை மேற்கொண்டு அந்த அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். முறைகேடு நடந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக 8 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க கைதிகளின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொகையில் முறைகேடு? நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Deepa Lakshmi ,Cuddalore ,Court ,Vellore ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...