* கொல்கத்தா, டெல்லி விமான நிலையத்தில் சுற்றி வளைத்தது அமலாக்கத்துறை
பூந்தமல்லி: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்களை மிரட்டி டிஜிட்டல் கைது என்ற பெயரில் மோசடி செய்த பல நூறு கோடி ரூபாயை கிரிப்டோ கரன்சி மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பிய வழக்கில் கொல்கத்தாவில் ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்ற மற்றொருவரையும் டெல்லியில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பெருநகர காவல் துறையில், தொழிலதிபர் ஒருவர், டிஜிட்டல் முறையில் தனது வங்கியில் இருந்து ரூ30 லட்சத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்ததாகவும், அந்த பணத்தை மீட்டு தர கோரியும் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் போல், பலரிடம் மர்ம நபர்கள் பல்வேறு பெயர்களில் மிரட்டி டிஜிட்டல் முறையில் பல கோடி ரூபாயை ஏமாற்றியது தெரியவந்தது.
இவ்வாறு, ஏமாற்றிய பணத்தை மர்ம நபர்கள், தங்களது வங்கி கணக்குகளில் இருந்து கிரிப்டோ கரன்சியாக மாற்றி அதை வெளிநாடுகளில் உள்ள மோசடி நபர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதுதொடர்பாக திருவல்லிக்கேணியில் மோசடி கும்பலை சென்னை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் தனியாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சென்னை உட்பட தமிழகத்தில், பொதுமக்களை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், உங்கள் பெயரில் போதைப் பொருள், வன விலங்கு பாகங்கள் பார்சல் வந்துள்ளதாகவும், அதை மும்பை சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்துவதாக கூறி வாட்ஸ் அப் மற்றும் ஸ்கைப் மூலம் மிரட்டி ‘டிஜிட்டல் கைது’ என மிரட்டி, அவர்களது வங்கி கணக்கில் இருந்து இதுவரை பல நூறு கோடி ரூபாயை தங்களது தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றி, பின்னர் கிரிப்டோ கரன்சி மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.
இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கு வங்கம், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், மோசடிக்கு பயன்படுத்திய செல்போன்கள், லேப்டாப்கள், மோசடிக்கு செய்ததற்கான மின்னணு சாதங்கள் மற்றும் இந்திய ரூபாயை கிரிப்டோ கரன்சி மற்றும் டாலருக்கு மாற்றும் அதி நவீன மின்னணு கருவிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில் சர்வதேச மோசடி கும்பலுடன் தொடர்பில் இருவர் இருந்ததை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து நேற்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மோசடி நபர் ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவன் அளித்த தகவலின் படி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்ற மற்றொரு மோசடி நபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி விமான நிலையத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் தமிழ்நாடு உட்பட நாடுமுழுவதும் பல நூறு கோடி மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கைது ெசய்யப்பட்ட நபர்களுக்கு உதவியாக இருந்த இடைத்தரகர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தமிழகம் முழுவதும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் மோசடி செய்த பல நூறு கோடி ரூபாயை கிரிப்டோ கரன்சி மூலம் வெளிநாட்டிற்கு அனுப்பிய 2 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.
